வெள்ளத்தில் மூழ்குவதில் இருந்து சென்னையை காப்பாற்றினோம் – ஸ்டாலின்

சென்னை: டிச. 14 வெள்ளத்தில் மூழ்குவதில் இருந்து சென்னையை காப்பாற்றி உள்ளோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக நிர்வாகி பி.கே.மூர்த்தி இல்ல திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர்; ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திமுக நிவாரணப் பணிகளில் ஈடுபடுகிறது. கொரோனா காலத்தில் எவ்வளவு பேரை இழந்தோம், எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டோம் என்பதை யாரும் மறந்திருக்க மாட்டோம்.
கொடுமையான கொரோனா சூழலில் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தை செயல்படுத்தினோம். ஒன்றிணைவோம் திட்டத்தில் மிழ்நாடு முழுவதும் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கினோம். கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தேடித் தேடி போய் உதவிகள் செய்தோம். குடும்பம் இருப்பதால்தான் குடும்பத்தை பற்றி பேசுகிறோம். குடும்பம் என்றாலே சிலர் அதை அரசியலாக்குகிறார்கள் என்று முதலமைச்சர் விமர்சனம் செய்தார். தொடர்ந்து பேசிய அவர்;’ சென்னையில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது.
சென்னையில் கனமழைக்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டாலும் இவ்வளவு பெரிய மழை பெய்யும் என எச்சரிக்கவில்லைஒரு நாள் முழுவதும் விடாமல் மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கவில்லை. எச்சரிக்கை விடுவிக்கப்பட்ட அளவை எல்லாம் தாண்டி 47 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது. 2015 வெள்ளத்தின்போது முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தார்; முன்கூட்டியே எச்சரிக்கை விடப்பட்டது. கனமழை எச்சரிக்கை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியை முன்கூட்டியே திறக்க முதலமைச்சரிடம் அனுமதி பெற முடியாத நிலை இருந்ததாக கூறப்பட்டது.

2015ல் செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் திறப்புக்கு அனுமதி கேட்க ஜெயலலிதாவிடம் அதிகாரிகள் பயந்தனர். 2015ல் கொஞ்சமாக ஏரியை திறந்திருந்தால் பலர் உயிரிழக்காமல் இருந்திருப்பார்கள். 2015-ஐ விட அதிகமாக, வரலாறு காணாத அளவுக்கு பெருமழை பெய்தபோதும் தற்போது செம்பரம்பாக்கம் ஏரியை முன்கூட்டியே திறந்ததால் பாதிப்பை தடுத்துள்ளோம். செம்பரம்பாக்கம் ஏரி நீரை தொடர்ந்து கண்காணித்து சென்னையை காத்தது திமுக அரசு. அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் என அத்தனை பேரும் களத்தில் நின்று பணியாற்றியதால் தான் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியை முன்கூட்டியே திறந்ததன் மூலம் பெரு வெள்ளத்தில் மூழ்குவதில் இருந்து சென்னையை காப்பாற்றி உள்ளோம். 2015- வெள்ளத்தின்போது நிவாரணப் பொருட்களில் ஜெயலலிதா பட ஸ்டிக்கரை ஒட்டி அனுப்பியது அதிமுக அரசு. தற்போது நிவாரணப் பொருட்களில் எந்த ஸ்டிக்கரும் ஒட்டாமல் கட்சி பாகுபாடின்றி அனைவருக்கும் வழங்கி வருகிறோம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கப்படும். வெள்ள பாதிப்பை மிக சாமர்த்தியமாக தமிழ்நாடு அரசு கையாண்டுள்ளதாக ஒன்றிய அரசின் குழுவே பாராட்டி உள்ளது எனவும் கூறினார்.