வெள்ள பேரிடர் தடுக்க சுரங்க பாதைகள் சிசிடிவி மூலம் கண்காணிப்பு

பெங்களூரு, செப். 4- பாதாள சாக்கடைகள் மற்றும் சுரங்கப்பாதைகளை சிசிடிவி மூலம் கண்காணிக்க பெங்களூரு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது பெங்களூரு கே.ஆர்.சதுக்கத்தில் உள்ள சுரங்கப்பாதையில் 22 வயதான தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் மழை வெள்ளத்தில் கார் மூழ்கியதால் இறந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, 53 பாதாளச் சாக்கடைகளுக்கான தணிக்கை அறிக்கையைத் தயாரிக்க கேட்டுக் கொள்ளப்பட்டது இந்த சம்பவத்திற்கு பிறகு மழை பேரிடரை தவிர்க்க தற்போது அனைத்து பாதாள சாக்கடைகள் மற்றும் மேம்பாலங்களை சிசிடிவி மூலம் கண்காணிக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் நேரலையில் நிலைமையைக் கண்காணித்து, பேரழிவு ஏற்படக்கூடிய சமயங்களில் போக்குவரத்து காவலர்களுடன் தொடர்புகொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள உள்கட்டமைப்பு இந்த நோக்கத்திற்காக பயன்படுத்த முடியுமா என்பது கேள்விக் குறியாக‌ இருக்கிறது. இந்த திட்டம் பரிசோதனை முயற்சியாக கே.ஆர்.சதுக்கத்தில் செய்யப்பட்டு, அதன் வெற்றியின் அடிப்படையில், இத்திட்டம் மற்ற சுரங்கப்பாதைகள் மற்றும் சாக்கடை கால்வாய்களில் செயல்படுத்தப்படும்.கே.ஆர்.சதுக்கத்தில் சிசிடிவி அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. சிசிடிவிகளின் வெற்றியானது பாதாளச் சாக்கடைகளை ஆய்வு செய்ய பயன்படுத்தத் மாநகராட்சியை தூண்டியது. இந்த திட்டத்திற்காக மாநகராட்சி தனியார் நிறுவனம் ஹிக்-கனெக்ட் உடன் இணைந்துள்ளது. ஹிக்-கனெக்ட் செயலி மாநகராட்சி அதிகாரிகளின் ஸ்மார்ட்போன்களுக்கு சிசிடிவிகளின் நேரடி காட்சிகளை வழங்குகிறது. பாதிக்கப்படும் பகுதிகளில் நிலைமையை கண்காணிக்கவும் விரைவான நடவடிக்கை எடுக்கவும் இது உதவுகிறது.
பெங்களூரு மாநகராட்சி மூத்த அதிகாரி ஒருவர் கூறிய‌து, ​​கே.ஆர்.சதுக்கத்தில் திட்டமிடப்படி அனைத்து நடவடிக்கைகளையும் முடித்துவிட்டோம். இருபுறமும் கிரேட்டிங் மற்றும் வடிகால் பணிகள் முடிந்துள்ளன. இதனையடுத்து அங்கு சிசிடிவி கேமராக்களை நிறுவியுள்ளோம், இப்போது அங்கு நீர் தேங்குவதற்கான‌ தடைகளை அகற்றுவது பற்றி யோசித்து வருகிறோம். சிசிடிவி நேரலை மூலம் நீர் நிலைகளை நாம் கண்காணிக்க முடியும். பாதாள சாக்கடையில் நடைபெறும் நிகழ்வுகளை செயலி மூலம் நேரடி சிசிடிவி காட்சிகளை எங்கள் தொலைபேசிகளுக்கு நேரடியாகப் பெற முடியும் என்றார்.
இந்த திட்டத்தை தொடர மாநகராட்சி மற்ற நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். சிசிடிவி நிறுவுவதற்கு அதிக‌ நிதி தேவைப்படுகிறது. நிதி கிடைத்து சிசிடிவிகளை பொருத்தினால், பெங்களூரில் சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து விதிமீறல்களையும் கண்காணிக்கலாம் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.