வேட்பாளராக கொலைக் குற்றவாளி மனைவி

புதுடெல்லி: மார்ச் 22.
பிஹாரில் ஆள் கடத்தல், கொலை, கும்பல் வன்முறை, சிறை உடைப்பு என பல்வேறு வழக்குகளில் சிக்கி 17 ஆண்டுகள் சிறையில் இருந்த கிரிமினல் குற்றவாளி அசோக் மஹ்தோவின் மனைவிக்கு லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியில் வேட்பாளராகும் வாய்ப்பு கிடைக்க உள்ளது. கிரிமினல் வழக்கால் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற காரணத்தால் மஹ்தோ அவசர அவசரமாக 46 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டு மனைவியை வேட்பாளராக்கும் முயற்சியை எடுத்து இருப்பது பிஹார் அரசியலில் கவனம் பெற்றுள்ளது.
பிஹாரில் 1990 காலகட்டத்தில் முக்கிய கிரிமினலாக இருந்தவர் அசோக் மஹ்தோ. குர்மியின் பிரிவான கொய்ரி சமூகத்தைச் சேர்ந்த இவருக்கும் பூமியார் சமூகத்தின் மற்றொரு குற்ற பின்னணி கொண்ட அரசியல்வாதியான அகிலேஷ் சிங்குக்கும் இடையேயான மோதலால் பிஹார் மாநிலமே நடுங்கியது. இவர்களின் மோதலால் சுமார் 200 கிராமங்கள் பாதிக்கப்பட்டன.இதன் பின்னணியில் நவாதாவின் மலைப்பகுதியில் கல் உடைப்பு மற்றும் மணல் அள்ளுதல் குத்தகையும் இடம் பெற்றிருந்தது.
இவர்களில் அசோக் மஹ்தோ மீது ஆள் கடத்தல் மற்றும் கொலை வழக்குகள் 30 பதிவாகி இருந்தன. இதில், பூமியார் சமூகத் தலைவர் காங்கிரஸ் எம்பி ராஜு சிங் கொலையும் இருந்தது. இந்த வழக்கில் கைதான அசோக், 2001-ல் நடத்திய ஜெயில் உடைப்பு வழக்கில் 17 வருடம் தண்டனை பெற்றார். இந்தச் சம்பவத்தில் 3 சிறை அதிகாரிகள் கொல்லப்பட்டிருந்தனர். இந்தச் சம்பவம் நெட்பிளிக்ஸிலும் தொடராக வெளியாகி பிரபலமானது.