வேட்பாளர் படிவத்தில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட தடை கோரி மனு

புதுடெல்லி: மார்ச் 9-
மக்களவை தேர்தலில் வேட்பாளர் படிவத்தில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட தடை விதிக்க கோரி தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக சட்ட விதிகளை மீறி எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் நிலுவையில் உள்ளன. அதேபோன்று இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட சூட் மனுவும் விசாரணையில் இருக்கிறது.
இந்நிலையில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தரப்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் ஒரு புதிய மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதில், \”அதிமுக கட்சி விதிகள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்வு ஆகியவற்றில் உண்மையை மறைந்து எடப்பாடி பழனிசாமி ஆவனங்களை தாக்கல் செய்துள்ளார். குறிப்பாக பொதுச்செயலாளர் தேர்வு விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முன்னதாக விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் சூட் மனு விசாரணையில் இருப்பதை அடிப்படையாக கொண்டு தான் ஈரோடு இடைத்தேர்தலின் போது எடப்பாடி பழனிசாமி வேட்பாளர் படிவத்தில் கையெழுத்து போடக்கூடாது என்று தெரிவித்து, கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனை கையெழுத்து போட வேண்டும் என்று அனுமதி வழங்கி இருந்தது.
தற்போது விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான வேட்பாளர் பட்டியலில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்து போட தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும். ஏனெனில் பொதுச்செயலாளர் வழக்கில் விசாரணை முடிந்து, இறுதியாக பிறப்பிக்கப்படும் உத்தரவால் வேட்பாளரின் வெற்றி வாய்ப்பு பறிபோகும் அபாய நிலை உள்ளது. அதாவது நீதிமன்றங்களில் இருக்கும் வழக்கில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது செல்லாது என்றோ, பொதுக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றோ, அல்லது எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது என்றோ உத்தரவு பிற்பபிக்கப்படும் பட்சத்தில் எடப்பாடி பழனிச்சாமியால் கையொப்பமிடப்பட்ட தேர்தல் படிவங்களும் செல்லாத ஒன்றாக ஆகிவிடும். இது நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெறும் உறுப்பினர்களுக்கு சட்ட சிக்கல்களை ஏற்படுத்தி அவர்கள் வெற்றியை ரத்து செய்யும் நிலைக்கு தள்ளிவிடும்.