வேட்புமனு தாக்கல் நிறைவு

சென்னை: மார்ச் 27: தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மதியம் 3 மணியுடன் முடிவடைகிறது. இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. ஆரம்ப நாட்களில் மனுதாக்கல் மந்தமாக இருந்தது.
சில சுயேச்சை வேட்பாளர்கள் மட்டும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். டெபாசிட் தொகைக்காக ரூபாய் நோட்டுகள், சில்லறை காசுகளை மூட்டையாக கொண்டு வந்தது, ரூபாய் நோட்டுகளை மாலையாக அணிந்து வந்தது, மனுதாக்கல் செய்ய மாட்டு வண்டியில் வந்தது என சில வேட்பாளர்கள் கவனம் ஈர்த்தனர்.
இந்த நிலையில், மார்ச் 25-ம் தேதி பங்குனி உத்திரம் நல்ல நாள் என்பதால் திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதனால், வேட்பாளர்கள், கட்சியினர் வருகையால் தேர்தல் அலுவலகங்கள் களைகட்டின.39 தொகுதிகளிலும் மனுதாக்கல் விறுவிறுப்பாக நடந்தது.
விருதுநகரில் மனுதாக்கல் செய்ய வந்த பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரும், தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனும் பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.
அதேபோல, தென் சென்னையில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனும், திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனும், ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். வடசென்னை தொகுதியில் திமுக – அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. நீலகிரியில் அதிமுக, பாஜக கட்சியினர் ஏராளமானோர் திரண்டதால் போலீஸார் தடியடி நடத்தும் நிலை ஏற்பட்டது.