வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அரசு முன்னுரிமை அளிக்கிறது

புதுடெல்லி, செப்.8
டெல்லியில் நடைபெற்ற இந்தியா-அமெரிக்கா தொழில் கவுன்சிலின் உச்சி மாநாட்டில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததைத் தொடர்ந்து, உலகளவில் பண வீக்கம் அதிகரிக்கத் தொடங்கியது.
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் பணவீக்கம் 7 சதவீதத்தைக் கடந்தது. ரிசர்வ் வங்கி இந்தியாவில் பணவீக்கத்தை 2 சதவீதம் முதல் 6 சதவீதத்துக்குள் கட்டுக்குள் வைக்க இலக்கு நிர்ணயித்தது.
ஆனால், இந்தியாவில் பணவீக்கம் 7 சதவீதத்தை தாண்டியது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் மேற்கொண்டன. இதையடுத்து கடந்த ஜூலை மாதம் பணவீக்கம் 6.7 சதவீதமாக குறைந்தது. கடந்த சில மாதங்களில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தக் கூடிய நிலைக்கு நாம் கொண்டு வந்துள்ளோம். பணவீக்கம் இந்தியாவின் முன்னுரிமை இல்லை. இது உங்களுக்கு ஆச்சரியம் அளிக்கலாம். பணவீக்கத்தைக் காட்டிலும் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகமாக உருவாக்கி தரவும், வருவாய் பகிர்வும்தான் எங்கள் முன்னுரிமையாக உள்ளது.” இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.