வைகை அணையில் தண்ணீர் திறப்பு

தேனி: நவ.23- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து 3 மாவட்ட பாசனத்துக்காக வினாடிக்கு 4,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வைகை பாசன பகுதி, பூர்வீக பகுதிக்காக இந்த தண்ணீர் தற்போது திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 15 நாட்களுக்கு இந்த தண்ணீர் திறக்கப்படவுள்ளது. அதாவது இன்றிலிருந்து வருகின்ற 29ம் தேதி வரை 3ம் பகுதி பூர்வீக பாசன பகுதிகளுக்கும், டிசம்பர் மாதம் முதல் தேதியில் இருந்து 5ம் தேதி வரை 2ம் பகுதி பூர்வீக பாசன பகுதிகளுக்கும், டிசம்பர் 6ம் தேதியில் இருந்து 8ம் தேதி வரை வைகை முதல் பகுதி பூர்வீக பாசன பகுதிகளுக்கும் என 15 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படவுள்ளது. பிரதான 7 பெரிய மதகுகள் வழியாக தண்ணீர் பாய்ந்தோடியது.
நீர் திறப்பால் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 1.30 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெறும். வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 67.77 அடியாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்மட்டம் வினாடிக்கு 5,849 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர் இருப்பு 5,265 மில்லியன் கனஅடியாக உள்ளது.