வைரஸ் காய்ச்சல் 2 பேர் பலி

புதுடெல்லி,மார்ச்.10-
இந்தியாவை மிரட்டி வரும் வைரஸ் காய்ச்சலுக்கு முதல் முறையாக இரண்டு பேர் பலியாகி உள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஒருவரும் அரியானா மாநிலத்தில் ஒருவரும் பலியானதாக தெரியவந்துள்ளது.
இந்த வைரஸ் காய்ச்சல் மேலும் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் தீவிர நடவடிக்கைகள் எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
கர்நாடகத்தில் ஒருவர் பலியானதை தொடர்ந்து கர்நாடக அரசு தடுப்பு நடவடிக்கைகளை மேலும் வேகப்படுத்தி உள்ளது. கலந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநில மருத்துவ கல்வித் துறை அமைச்சர் டாக்டர் சுதாகர் தலைமையில் உயர் அதிகாரிகள் நிபுணர்கள் கூடி கர்நாடகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்தனர் இந்த நிலையில் வைரஸ் காய்ச்சலுக்கு கர்நாடகத்தில் ஒருவர் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில்
பெரும் நகரங்களில் மர்ம காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இது,எச்3என்2 இன்ஃப்ளூயன்ஸா என மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். இது இன்ஃப்ளூயன்ஸா என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு வகை இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் ஆகும். இது சுவாச நோயை ஏற்படுத்துகிறது. டெல்லியில் இந்த இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலுக்கு ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தவிர, கடுமையான குளிரிலிருந்து வெப்பத்திற்கு வானிலை மாறும் போதும் காய்ச்சல் அறிகுறிகள் ஏற்படலாம். காய்ச்சல், இருமல், தொண்டை புண், தொண்டை கரகரப்பு, மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கு அடைத்தல், உடல் வலி, தலைவலி, குளிர் மற்றும் சோர்வு ஆகியவை எச்3என்2 இன்ஃப்ளூயன்ஸாவின் பொதுவான அறிகுறிகளாகும். சில சமயங்களில், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கும் ஏற்படலாம். இந்த பொதுவான அறிகுறிகள் ஒரு வாரத்திற்கு அல்லது அதற்கு மேலும் நீடிக்கலாம். எனவே, மருத்துவர்களை அணுகுவது நல்லது என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இதுவரை ஹெச் 3 என் 2 வைரஸ் தாக்கியதில் இரண்டு பேர் இறந்துள்ளார். இதில் கர்நாடகாவில் ஒருவரும் ஹரியானாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். நாட்டில் தற்போது 90 ஹெச்3 என்2 புகார்கள் பதிவாகியுள்ளது. தவிர 8 ஹெச்1 என் 1 புகார்களும் பதிவாகியுள்ளன. நாடு முழுக்க தற்போது பெருகி வரும் காய்ச்சல்களுக்கு ஹெச்3 என்2 வைரஸே காரணம் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த காய்ச்சலுக்கு ஹாங்க் காங்க் காய்ச்சல் என்றும் பெயரிடப்பட்டுள்ளது .காய்ச்சல் , குளிர் , இருமல் , சுவாசக்கோளாறுகள் மற்றும் மூக்கு ஒழுகுதல் ஆகியவை இந்த நோய்களுக்கான அறிகுறி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மூன்று நாட்களுக்கும் அதிகமாக இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் உடனே மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும் எனவும் அறிவியுறுத்தப்பட்டுள்ளார்கள்.