ஷிரத்தாவின் தலை கண்டுபிடிப்பு? காதலனிடம் மேலும் விசாரிக்க அனுமதி

புதுடெல்லி, கடந்த ஜூன் மாதம் டெல்லியில் கண்டெடுக்கப்பட்ட தலை, ஷிரத்தாவின் தலையாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக மரபணு பரிசோதனை நடத்தப்படுகிறது. கைதான காதலன் அஃப்தாப் அமீனை மேலும் 5 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. டெல்லி மஹரவுலி பகுதியில் இளம்பெண் ஷிரத்தாவை அவரது காதலன் அஃப்தாப் அமீன் கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டிய வழக்கில் நாள்தோறும் புதிய தகவல்கள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. கடந்த மே 18-ம் தேதி ஷிரத்தாவை தலையணையால் அழுத்தி கொலை செய்த அஃப்தாப் குளியல்அறையில் வைத்து அவரது உடலைதுண்டு, துண்டாக வெட்டி உள்ளார்.ரத்தக் கறையைப் போக்க தண்ணீர் குழாயை முழுவதும் திறந்து விட்டுள்ளார். டெல்லி அரசு சார்பில் ஒவ்வொரு மாதமும் ஒரு குடும்பத்துக்கு 20,000 லிட்டர் தண்ணீர் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. இதன்படி அஃப்தாப் குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இதுவரை யாருமே குடிநீர் கட்டணம் செலுத்தியது இல்லை. ஆனால் மே மாதத்தில் அஃப்தாபுக்கு மட்டும் கூடுதலாக தண்ணீர் பயன்படுத்தியதால் ரூ.300 குடிநீர் கட்டணம் விதிக்கப்பட்டு உள்ளது. ரத்தக் கறையை மறைக்க அவர் அளவுக்கு அதிகமாக தண்ணீரை பயன்படுத்தி உள்ளார். இதை முக்கிய ஆதாரமாக போலீஸார் கருதுகின்றனர். ஷிரத்தாவின் உடல் பாகங்கள் வீசப்பட்ட டெல்லி மஹரவுலி வனப்பகுதியில் சுமார் 13 எலும்புகள் கண்டுடெடுக்கப்பட்டு உள்ளன. இவை ஷிரத்தாவின் எலும்புகளா என்பதை கண்டறிய மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளன.