ஸ்க்விட் கேம் விற்பனை செய்தவருக்கு மரண தண்டனை; வாங்கிய மாணவனுக்கு ஆயுள் தண்டனை

பியோங்யாங், நவ. 25- நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ‘ஸ்க்விட் கேம்’ என்ற கொரியன் இணைய தள தொடர் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்து வருகிறது.
கொரிய இயக்குநர் ஹ்வாங் டாங்-ஹியூக் எழுதி இயக்கியுள்ள இந்த தொடரானது கடந்த செப்டம்பர் மாதம் 17ம் தேதி வெளியானது. வெளியான உடனேயே நெட்பிளிக்ஸின் உலக புகழ்பெற்ற 10 வெப்சீரிஸ்களில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த ஸ்க்விட் கேமை வடகொரியாவைச் சேர்ந்த ஒருவர் உயர்நிலைப் பள்ளி மாணவர் ஒருவருக்கு யுஎஸ்பி டிரைவ்களில் விற்பனை செய்து உள்ளார். மாணவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து அதனை பள்ளியில் வைத்து பார்த்து உள்ளார். இது குறித்து அறிந்த வடகொரிய சட்ட அமலாக்க வட்டாரம் மாணவர்களை பிடித்து உள்ளது.
தற்போது ஸ்க்விட் கேமின் நகல்களை விநியோகித்ததற்காக வட கொரிய நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது மரண தண்டனை துப்பாக்கி படையினரால் சுட்டு நிறைவேற்றப்படும் என்று கூறப்படுகிறது. ஸ்க்விட் கேமை பார்த்ததற்காக மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையும், கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்க்விட் கேமின் நகலை சீனாவில் வாங்கி அதை வட கொரியாவிற்கு கொண்டு வந்ததாக ரேடியோ பிரீ ஏசியா தெரிவித்துள்ளது. அந்த நபர் யுஎஸ்பி டிரைவ்களில் பிரதிகளை விற்றதாகக் கூறப்படுகிறது.
டிரைவ் வாங்கியதற்காக ஒரு மாணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. ஸ்க்விட் கேமை பார்த்ததற்காக மற்ற ஆறு பேருக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் வெளியேற்றப்பட்டு சுரங்கங்களில் வேலை செய்யும் தண்டனை வழங்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.