ஸ்டான்ட் அப் நகைச்சுவையாளர் வீர் தாஸ் நிகழ்ச்சி ரத்து

பெங்களூர்: நவம்பர். 10 – ஹிந்து ஆதரவு இயக்கங்களின் எதிர்ப்புகள் விளைவாக நகரில் நடக்கவிருந்த ஸ்டான்ட் அப் நகைச்சுவையாளர் வீர் தாஸ் நிகழ்ச்சி  கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியால் ஹிந்து ஆன்மீக உணர்வுகளுக்கு பாதிப்புகள் ஏற்படும் என குற்றஞ்சாட்டி ஹிந்து ஆதரவு இயக்கங்கள் எதிர்ப்புகளை தெரிவித்திருந்தன. இது குறித்து வெளிவந்துள்ள தகவல்களின் படி மல்லேஷ்வரத்தில் உள்ள சவுடய்யா நினைவு அரங்கத்தில் இன்று மாலை 5.30 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறவிருந்தது . ஆனால் இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இந்தியா , பெண்கள் மற்றும் ஹிந்து ஆசாரங்களை அவமதிக்கும் நகைச்சுவை நடிகரின் இன்றைய நிகழ்ச்சி ரத்து செய்திருப்பது வரவேற்கத்தக்கது என ஹிந்து ஜன ஜாகிருதி சமிதியின் பொறுப்பாளர் மோகன் கௌடா தெரிவித்துள்ளார். நாங்கள் இந்த நிகழ்ச்சிக்கு எதிராக வயாலிகாவல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தோம். ஹிந்து இயக்கங்களின் ஒருமித்த எதிர்ப்புகளால் இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. நகைச்சுவை என்ற பெயரில் ஹிந்து ஆசாரங்களை அவமானப்படுத்துவதை எங்கெங்கு நடந்தாலும் அதை எதிர்க்க வேண்டும் என கௌடா தெரிவித்துள்ளார். ஒரு ஆண்டுக்கு முன்னர் வீர்தாஸ் இந்தியாவை தாக்கி பேசியதால் நாடு முழுக்க பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது என்பது இந்த நிலையில் நினைவு கூறத்தக்கது.