ஸ்டார்ட் அப் நிறுவன ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ

ஸ்ரீஹரிகோட்டா: மே. 30 சென்னையை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் ராக்கெட்டை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. விண்வெளித் துறையில் ஈடுபட்டு வரும் சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான, ‘அக்னிகுல் காஸ்மோஸ்’ நிறுவனத்தின் ராக்கெட் செலுத்தும் சோதனை முயற்சி நடைபெற்றுவந்தது. முன்னதாக, கடந்த மார்ச் 22 மற்றும் ஏப்ரல் 7 ஆகிய தேதிகளில், ராக்கெட் செலுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அவை பின் கைவிடப்பட்டன.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’, இதுவரை ‘செமி கிரையோஜெனிக்’ இன்ஜினை பயன்படுத்தியது இல்லை, தற்போது தான் அவற்றை உருவாக்கி வருகிறது. ஆனால் இந்நிறுவனம், இந்தியாவிலே முதல் முறையாக செமி கிரையோஜெனிக் இன்ஜினை பயன்படுத்தியுள்ளது. சென்னை, ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையத்தில் இருந்து உருவானது, இந்த நிறுவனம். கடந்த, 2017ல், இரண்டு இளம் இன்ஜினியர்களால் துவங்கப்பட்டது.
இவர்களுடைய முயற்சியை ஊக்குவிக்கும் வகையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் ராக்கெட் ஏவும் தளத்தில், இந்த நிறுவனத்துக்கென, தனியாக ராக்கெட் ஏவும் தளத்தை உருவாக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் வெற்றி பெறும் பட்சத்தில் இன்றைய தினம் சென்னையை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் ராக்கெட்டை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனத்தின் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. அக்னிபான் SOrTeD என்ற ராக்கெட்டை காலை 7.15 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. செமி – கிரையோஜெனிக் மூலம் இயங்கும் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். தொழில்நுட்ப கோளாறு காரணமாக 4 ஏவுதள திட்டங்கள் கைவிடப்பட்ட நிலையில் தற்போது ராக்கெட் ஏவப்பட்டுள்ளது.