சென்னை: ஆகஸ்ட் 19
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்குமாறு முதல்வர் ஸ்டாலினிடம் மத்திய அமைச்சர்ராஜ்நாத் சிங் தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கரின் பதவிக் காலம் வரும் 2027 ஆகஸ்ட் வரை உள்ள நிலையில், உடல்நிலையை காரணம் காட்டி அவர் தனது பதவியை கடந்த ஜூலை 21-ம் தேதி திடீரென ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டதை அடுத்து, மத்திய அரசிதழிலும் அதுகுறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டது.இதையடுத்து, புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் உடனடியாக தொடங்கியது. போட்டி இருக்கும் பட்சத்தில் செப்டம்பர் 9-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.குடியரசு துணைத் தலைவரை மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் இணைந்து தேர்வு செய்வார்கள். மக்களவையில் தற்போது 542 எம்.பி.க்கள் உள்ளனர். ஒரு இடம் காலியாகஉள்ளது. அதேபோல, மாநிலங்களவையில் 239 எம்.பி.க்கள் உள்ளனர். அங்கு 6 இடங்கள் காலியாக உள்ளன. குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. மனுக்களை தாக்கல் செய்ய ஆகஸ்ட் 21-ம் தேதி கடைசி நாள்.மனுக்கள் 22-ம் தேதி பரிசீலிக்கப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல் 25-ம் தேதி வெளியிடப்படும். இந்நிலையில், மக்களவை, மாநிலங்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளது. இதனால், இந்த கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கே வெற்றி என்பது உறுதியாகியுள்ளது.














