ஸ்டாலின் எடப்பாடி ஆய்வு

சென்னை நவ.14-தமிழகத்தில் மழை பாதிப்புகளை முதல்வர் மு க ஸ்டாலின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேரில் பார்வையிட்டு நிவாரண உதவிகள் வழங்கினர்
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் கனமழை பெய்து வருகிறது. இந்த அதீத கனமழையால் மயிலாடுதுறை, கடலூர், பூம்புகார், சீர்காழி ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். கடலூர் மாவட்டம் கீழ்பூவாணிக்குப்பம் பகுதியில் மழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த புகைப்படங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். கனமழை காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்தும், எடுத்து வரும் நடவடிக்கைகள், வெள்ளத்தடுப்பு திட்டங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதன்பின், மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். சிதம்பரம், வல்லம் படுகை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டு வருகிறார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தலைநகர் சென்னை தொடங்கி குமரி வரை பரவலாக மழை கொட்டி வருகிறது. வெளுத்து வாங்கிய மழை சென்னையை பொறுத்தவரை பெருநகர் மற்றும் புறநகர் பகுதியில் தினமும் காலை தொடங்கி இரவு வரை மழை வெளுத்து வாங்கி வருகிறது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களிலும் விடியவிடிய மழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகர் பொறுத்தவரை முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகளை பெருநகர சென்னை மாநகராட்சி மேற்கொண்டாலும் சில இடங்களில் இன்னமும் தண்ணீர் தேங்கி நிற்பதை பார்க்க முடிகிறது. இவற்றை மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த பணிகளை மாநகராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மழையால் பாதிக்கப்பட்ட ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட முகலிவாக்கம் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.