ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க அனுமதிஇல்லை

புதுடெல்லி: மார்ச்1 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் ஆலை மூடி சீல் வைத்த தமிழ்நாடு அரசின் நடவடிக்கை செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் நச்சுப் புகையால் பொதுமக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 2018ம் ஆண்டு பொதுமக்கள் நடத்திய போராட்டம் நூறாவது நாளை எட்டியதை தொடர்ந்து, மே.22ம் தேதியன்று பொதுமக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர். அப்போதைய அதிமுக ஆட்சியில் காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 28ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழ்நாடு அரசால் சீல் வைக்கப்பட்டது. இதுகுறித்த அரசாணையும் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம் முதலாவதாக தொடர்ந்த வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் நிர்வாகத்துக்கு ஆதரவாக உத்தரவு பிறப்பித்தது.இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையின் கோரிக்கையை நிராகரித்து, அவர்களது ரிட் மனுவை தள்ளுபடி செய்ததோடு, இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டது. வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,‘‘ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்ததுடன், தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லும் என கடந்த 2020ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அமர்வில் நான்காவது நாளாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்தியநாதன், கோபால் சங்கர் நாராயணன், குமணன் மற்றும் பூர்ணிமா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தங்கள் வாதத்தில், காப்பர் கழிவுகள், ஜிப்சம் ஆகியவற்றை ஆலை நிர்வாகத்தின் தரப்பில் நீக்கம் செய்யாததே ஆலையை மூடியதற்கு முக்கிய காரணம். குறிப்பாக நிலத்தடி நீர் மாசு அடைந்தது மட்டுமில்லாமல், அது ஆரஞ்சு நிறம் போன்று மாறியுள்ளது. இதனை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது. குறிப்பாக ஸ்டெர்லைட் ஆலை அமைவதற்கு முன்னதாக அந்த பகுதியில் 1700க்கும் மேற்பட்ட பசுமையான மரங்கள் இருந்தது. தற்போது ஆலையால் ஏற்பட்ட பாதிப்பால் அப்பகுதி கான்கிரீட் காடுகளாக மாறியுள்ளன. இதனை தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட குழு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை உறுதி செய்துள்ளது என்று தெரிவித்தனர்.