ஸ்ரீரங்கம் கோவிலுக்கு போலீஸ் பாதுகாப்பு: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை, செப். 17-
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க, அரசுத் தரப்பில் பரிசீலிக்க, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த பொதுநல மனு: ஈ.வெ.ரா., பிறந்தநாளை முன்னிட்டு, மனு ஸ்மிருதி, வேதங்கள் மற்றும் ஆகமங்களை ஸ்ரீரங்கத்தில் செப்., 17ல் மக்கள் அதிகாரம் அமைப்பினர் எரிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறி, சமூக வலைதளங்களில் தகவல் பரவுகிறது.ஹிந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில், வேத புத்தகங்களை தவறாக சித்தரிக்கின்றனர். சமூகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற போராட்டம் நடத்துகின்றனர்.உள்நோக்குடன் மத உணர்வு, நம்பிக்கையை புண்படுத்தினால் சட்டப்படி, மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்க முடியும். கருத்து சுதந்திர உரிமை என்ற பெயரில் தவறான தகவல்களை பரப்பி, பாகுபாட்டை ஊக்குவிக்கின்றனர்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சராகலாம் சட்டம் பற்றி தவறான தகவல்களை பரப்புகின்றனர். நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சிக்கின்றனர். மக்கள் அதிகாரம், தேசிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியினர் அனுமதியின்றி போராட்டம் நடத்துவதை தடை செய்து, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க தமிழக உள்துறை செயலர், டி.ஜி.பி.,க்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறினார்.
நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு விசாரித்தது. தமிழக அரசுத் தரப்பு, ‘தி.க., மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பு நிர்வாகிகளுடன் ஸ்ரீரங்கம் ஆர்.டி.ஓ., சமாதான கூட்டம் நடத்தினார். செப்., 17ல் நடைபெறவிருந்த போராட்டம் கைவிடப்படுகிறது. இதை மீறி நடத்தினால் உரிய சட்ட நடவடிக்கை எடுப்பது என தீர்மானிக்கப்பட்டது’ எனக்கூறி, ஆவணம் தாக்கல் செய்தது.

நீதிபதிகள், ‘சம்பந்தப்பட்ட பகுதியில் சட்டம் – ஒழுங்கு, பொது அமைதியை நிலைநாட்ட அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்டம் என்ற போர்வையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ரங்கநாதர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக மனுதாரர் கூறுகிறார்.

‘தேவையான போலீஸ் பாதுகாப்பை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும். விசாரணை செப்., 23க்கு ஒத்தி வைக்கப்படுகிறது’ என்றனர்.