ஸ்ரீரங்கம் ராமேஸ்வரம் கோவில்களில் மோடி சிறப்பு வழிபாடு

ராமேசுவரம், ஜன.20
ரங்கநாதரை தரிசிக்க பிரதமர் நரேந்திர மோடி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்தடைந்தார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் சென்றார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்கிறார். பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி ஸ்ரீரங்கத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரங்கா ரங்கா கோபுரத்திற்கு முன்பு கோயில் அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். கருடாழ்வார், மூலவர், தாயார் உள்ளிட்ட முக்கிய சன்னதிகளில் சாமி தரிசனம் செய்கிறார். சக்கரத்தாழ்வார், பட்டாபிராமர், கோதண்ட ராமர், ராமானுஜர் சன்னதிகளிலும் சாமி தரிசனம் செய்யவுள்ளார்.
கம்ப ராமாயண அரங்கேற்ற மண்டபத்தில் கம்ப ராமாயண பாடல்களை கேட்க உள்ளார். ஏராளமான பொதுமக்கள் வழிநெடுகிலும் காத்திருந்து, பிரதமர் மோடிக்கு வரவேற்பு கொடுத்தனர். சாலை வழியாக ரங்கநாதர் கோயிலுக்குச் சென்ற பிரதமருக்கு வழிநெடுகிலும் பாஜகவினர் வரவேற்பு தெரிவித்தனர். காரில் இருந்தபடி சாலையின் இருமருங்கிலும் திரண்ட மக்களுக்கு பிரதமர் கை அசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
காரின் கதவை திறந்து நின்றபடி சென்ற பிரதமர் மோடி தொண்டர்களை பார்த்து கையசைத்தார். மலர்களைத் தூவியும், ஜெய் ஸ்ரீராம் போன்ற முழக்கங்களை எழுப்பியும் பாஜகவினர் வரவேற்பு அளித்தனர். எஸ்பிஜி, காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் ஸ்ரீரங்கம் கோயில் கொண்டு வரப்பட்டுள்ளது. பிரதமர் வருகையையொட்டி ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை. சாமி தரிசனம் செய்த பிறகு திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்கிறார்.