ஸ்ரேயஸ் ஐயர் தலைமைப் பொறுப்பில் ஜொலிக்குமா கொல்கத்தா?

டெல்லி, மார்ச் 18- ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), மும்பைஇந்தியன்ஸ் அணிகளுக்கு அடுத்தபடியாக வெற்றிகரமான அணியாகத் திகழ்வது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (கேகேஆர்) அணிதான். 2 முறை அந்த அணி கோப்பையைவென்றதோடு, 4 முறை பிளே-ஆப்சுற்று வரை முன்னேறியது. 2021-ல் அந்த அணி இறுதிச் சுற்று வரை முன்னேறி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வி கண்டு கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. துடிப்பான இளம் வீரர் ஸ்ரேயஸ் ஐயரின் தலைமையில் இந்த முறை கேகேஆர் அணி களமிறங்குகிறது. பேட்டிங்கில் அந்த அணி ஸ்ரேயஸ் ஐயர், ரஹ்மனுல்லா குர்பாஸ், பிலிப் சால்ட், நிதிஷ் ராணா, ரிங்கு சிங், வெங்கடேஷ் ஐயர் என பலம்வாய்ந்த வரிசையைக் கொண்டுள்ளது. டெல்லி அணிக்காக விளையாடி வந்த ஸ்ரேயஸ் ஐயர், 2022-ம் ஆண்டு முதல் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார். காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள அவர் கேப்டன் பொறுப்பில் ஜொலிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். அதுமட்டுமல்லாமல் ஆட்டத்தின் போக்கை கடைசி ஓவர்களில் மாற்றக்கூடிய ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸல் ஆகியோர் எதிரணிக்கு சவால் விடக்கூடியவர்கள். இந்த ஐபிஎல் சீசனிலும் இருவரது அதிரடி தொடரும் என்று நம்பலாம். பவுலிங்கில் இந்த முறை அதிகபட்சமாக ரூ.24.75 கோடிக்கு வாங்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும் அணிக்கு பக்கபலமாக வருண் சக்கரவர்த்தி உள்ளார். கடந்த சீசன்களில் பல போட்டிகளில் முக்கிய விக்கெட்களை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தியவர் வருண். இந்த முறையும் அவரது பந்துவீச்சு எதிரணி வீரர்களுக்கு கிலியை ஏற்படுத்தும் என்று நம்பலாம். மேலும் பந்துவீச்சில் சுனில் நரைன், முஜீப் ரஹ்மான், ஹர்ஷித் ராணா, துஷ்மந்தா சமீரா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். புதிய வரவுகளான ஷெர்பான் ருதர்போர்ட், கஸ் அட்கின்சன், சேதன் சகாரியா, அங்கிருஷ் ரகுவன்ஷி, ரமன்தீப் சிங், சகிப் ஹுசைன் ஆகியோரிடமிருந்து அதிக செயல்திறன் வெளிப்படும்போது அது கேகேஆர் அணியின் வெற்றி வாய்ப்பு சதவீதத்தை அதிகரிக்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.