ஹரியானா இப்போது ஒவ்வொரு பெண் குழந்தை பிறப்பையும் கொண்டாடுகிறது

கர்னா, மார்ச் 11- ஹரியானா மாநிலம் கர்னாலில் மாநில அளவிலான ‘சம்மான் சமரோ’ நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார், கல்வி, கலாச்சாரம், பாதுகாப்பு, பாடல், மருத்துவம், சமூக நலம், விளையாட்டு, விமானப் போக்குவரத்து மற்றும் மலையேற்றம் போன்ற பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த பெண்களை கவுரவித்தார். சில பெண்களுக்கு சுஷ்மா ஸ்வராஜ் விருது,
இந்திரா காந்தி மகிளா சக்தி விருது மற்றும் கல்பனா சாவ்லா சௌர்ய புரஸ்கார் விருதுகளை வழங்கி கவுரவித்தார். மேலும், பாலின விகிதத்தை மேம்படுத்தியதற்காக ஃபதேஹாபாத், அம்பாலா மற்றும் ஜிந்த் ஆகிய மாவட்ட துணை ஆணையர்களுக்கும் அவர் ரொக்கப் பரிசுகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மனோகர் லால் கட்டார்,
ஒரு காலத்தில் பெண் சிசுக்கொலைக்கு பெயர் போன ஹரியானா, இப்போது ஒவ்வொரு பெண் குழந்தை பிறப்பையும் கொண்டாடி வருவதாகவும், இன்று மாநிலத்தில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 923 பெண் குழந்தைகள் இருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:- ஹரியானாவில் பாலின விகிதத்தை மேம்படுத்த மாநில அரசு, சமூக அமைப்புகள், காப் பஞ்சாயத்துகள்,
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் சுகாதாரத் துறைகள் அயராத முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. மேலும், பெண் சிசுக்கொலையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை போலீசார் உறுதி செய்தனர்.