ஹாசன் மக்களவை தொகுதியில் பிரஜ்வலுக்கு ஆதரவு திரட்டும் தேவேகவுடா

ஹாசன், ஜன. 24: பாஜக‌, மஜத‌, கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முடிவடைவதற்கு முன்பே, ஹாசன் தொகுதிக்கு, தன் பேரனும், தற்போதைய‌ எம்.பி.யுமான பிரஜ்வல் பெயரை அறிவித்த, மஜத‌ தலைவர் எச்.டி. தேவேகவுடா தற்போது கட்சித் தொண்டர்களிடம் தனது வேட்பாளருக்கு ஆதரவை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
ஏற்கனவே பேலூர், ஹாசன், அரசிகெரே ஆகிய இடங்களில் செயல்வீரர்கள் மற்றும் தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட்டு, பிரஜ்வலின் பெயரை மீண்டும் வலியுறுத்தினர். 24ம் தேதி சென்னராயப்பட்டனாவிலும், 25ம் தேதி ஆலூர், சக்லேஷ்பூரில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கூட்டணியின் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையாத நிலையில், ‘பிரஜ்வல் ஹாசனில் போட்டியிடுவார்’ என, தேவகவுடா அறிவித்திருப்பது, பாஜக‌ தலைவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், மஜத‌ தலைவர்களும், ‘பிரஜ்வல் போட்டியிட்டால், வெற்றி கடினமாக இருக்கலாம்’ என்ற கருத்தும் நிலவுகிறது. இந்நிலையில், பிரஜ்வலுக்கு ஆதரவாக எச்.டி.தேவேகவுடா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
மறுபுறம், பாஜக‌ மாநில பாஜக பொதுச்செயலாளர் ஆன பின்பு, ‘சீட் பங்கீடு பேச்சு வார்த்தை நடக்கும் வரை காத்திருப்போம்’ என, பிரச்னையை மென்மையாக‌ பிரீதம் கவுடா கையாண்டு வருவதாக தெரிகிறது.
பிரஜ்வல் மீது எம்பி பதவி தொடர்பான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு, தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. தகுதி நீக்கம் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம்
இடைக்காலத் தடை விதித்து, இறுதித் தீர்ப்பு இன்னும் வரவில்லை. அப்படிப்பட்ட நிலையில் அவரது பெயரை அறிவிப்பது சரியல்ல. உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தால் தகுதி நீக்கம் தவிர, அடுத்த 6 ஆண்டுகளுக்கு பிரஜ்வல் தேர்தலில் நிற்க முடியாது.
அப்போது மற்ற வேட்பாளர் யார் என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே வேட்பாளர் மிகவும் கவனமாக அறிவிக்க வேண்டும். தேவகவுடா ஹாசன் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டால் நல்லது’ என்பது மஜத‌ தலைவர்களின் கருத்தாக உள்ளது.
‘பிரஜ்வல் போட்டியிடப் போகிறார், அவர் வெற்றி பெற வேண்டும்’ என்று எச்.டி.தேவகவுடா தொடர்ந்து அரசிகெரே, பேலூர், ஹாசன் கூட்டத்தில் வலியுறுத்தி வருவ‌து குறித்து கருத்து தெரிவிக்க பிரஜ்வல் மறுத்துவிட்டார்.