ஹிஜாப் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் வாதத்தை மாற்றிய முஸ்லிம் தரப்பு

புதுடெல்லி: செப்.14 –
உச்ச நீதிமன்ற வழக்கில் முஸ்லிம்கள் தரப்பு இஸ்லாத்தில் ஹிஜாப் கட்டாயம் என வலியுறுத்தி வந்தது. தற்போது இதை மாற்றி பெண்களுக்கான ஹிஜாபை குர்ஆனின் அடிப்படையில் பார்க்காமல், அவர்களின் அடிப்படை உரிமையாக பார்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.கர்நாடகாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை விதித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் தரப்பில் தொடுக்கப்பட்ட இவ்வழக்கை நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் சுதான்ஷு துலியா ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது ஒரு திருப்பம் ஏற்பட்டது.
இதுகுறித்து முஸ்லிம்கள் தரப்பின் வழக்கறிஞர்களான யூசுப் எச்.முச்சாலா மற்றும் சல்மான் குர்ஷீத் தங்கள் வாதத்தில் கூறும்போது, “குர்ஆன் எழுதப்பட்ட அரபு மொழியை தெளிவாகப் புரிந்துகொள்வதில் நீதிமன்றத்துக்கு சிக்கல் இருப்பதாகத் தெரிகிறது. இச்சூழலில் குர்ஆனை முழுமையாகப் புரிந்துகொள்வது இயலாது. எனவே, ஹிஜாப் என்பது பெண்களின் தனியுரிமை, பாதுகாப்பு, அடையாளம் மற்றும் மதிப்பு என்ற அடிப்படையில் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தனர்.