ஹிஜாப் வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி, செப்டம்பர் 6- கர்நாடக மாநில கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த அம்மாநில அரசின் உத்தரவை கர்நாடகா உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் விளக்கம் அளிக்க கோரி கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த குப்தா மற்றும் சுதான்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், மாநில அரசு கல்வி உரிமையை பறிக்கவில்லை. பரிந்துரைக்கப்பட்டுள்ள சீருடையில் மாணவர்கள் வர வேண்டும் என்றுதான் மாநில அரசு கூறுகிறது. ஹிஜாப் அணிய உங்களுக்கு மத ரீதியில் உரிமை இருக்கலாம். ஆனால் அந்த உரிமையை சீருடை நிச்சயம் அணியவேண்டிய கல்வி நிறுவனங்களுக்குள் கொண்டு வரலாமா? ஹிஜாப் இஸ்லாமிய மதத்தின் இன்றியமையாத நடைமுறையாக இருக்கலாம். நாங்கள் சொல்வது அரசு கல்வி நிறுவனங்களில் நீங்கள் மத ரீதியிலான உடையை அணியலாமா? என்பது தான். இந்திய அரசியலமைப்பு நமது நாடு மதச்சார்பற்ற நாடு என்கிறது. ஆனால், நீங்கள் மத ரீதியிலான உடை, அரசு நடத்தும் கல்வி நிறுவனத்தில் அணியப்படவேண்டும் என கூறுகிறீர்கள். இது விவாதத்திற்கு உரியது. மாணவிகள் அவர்கள் விருப்பப்படி ஆடை அணிந்து வரலாமா? இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.