ஹைதராபாத் கனமழை பள்ளிகளுக்கு விடுமுறை

ஹைதராபாத்,செப் 5- தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இன்று அதிகாலை கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழை காரணமாக காலை 6.15 மணியளவில் ஹைதராபாத் மாநகராட்சி மக்கள் யாரும் அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு மிகமிக அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என்று எச்சரித்திருந்தது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு: சற்றும் எதிர்பாராமல் அதிகாலையில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஹைதராபாத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. இதனால் ஆங்காங்கே போக்குவரத்து ஸ்தம்பித்தது. அது மட்டுமல்லாது கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி மியாபூரில் 14.7 செ.மீ, எச்எம்டி நகரில் 14 செ.மீ, மழை பதிவானது. செரிலிங்கம்பள்ளி (13.8 செ.மீ), ராஜேந்திர நகர் (13.8 செ.மீ.), குதுபுல்லாபூர் (12.1 cm), ஷேக்பேட் (12 cm), கைரதாபாத், மல்கஜ்கிரி (10.9 cm), செகுந்தராபாத் (10.7 cm) ஆகிய பகுதிகளில் 10 செமீ மழை பதிவாகியுள்ளது.அதிகாலை தொடங்கி சில மணி நேரங்களில் பரவலாக பல இடங்களில் சராசரியாக 12 செ.மீ மழை பெய்த நிலையில் ஹைதராபாத்துக்கு
இன்று ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.கனமழை காரணமாக ஹைதராபாத், ரெங்காரெட்டி, மேத்சல் போன்ற பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதை சுட்டிக் காட்டியுள்ள மாநகர போக்குவரத்து காவல்துறை பொதுமக்கள் இன்று பயணங்களை மிகவும் கவனமாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.
இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை வழக்கத்தைவிட 36 சதவீதம் குறைவாகப் பதிவாகியிருக்கும் சூழலில் பருவ மழை காலம் முடிவுறும் நிலையில் தெலங்கானாவில் பெய்துள்ள மழை ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது.