லண்டன், ஜூலை 17- லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 10 முதல் 14 வரை நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தனது பந்துவீச்சு மட்டுமல்லாமல், பேட்டிங்கிலும் கவனம் ஈர்த்தார். முதல் இன்னிங்ஸில் 74 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா, இரண்டாவது இன்னிங்ஸிலும் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் இணைந்து பும்ராவை காயப்படுத்த திட்டமிட்டதாக கைஃப் குற்றம் சுமத்தி இருக்கிறார். இரண்டாவது இன்னிங்ஸில் 10வது வரிசையில் களமிறங்கிய பும்ரா, கடைசி நாள் ஆட்டத்தில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் வரை இங்கிலாந்து பந்துவீச்சாளர்களைத் திணறடித்தார். 54 பந்துகளைச் சந்தித்த அவர், 5 ரன்கள் மட்டுமே எடுத்தாலும், ரவீந்திர ஜடேஜாவுடன் சேர்ந்து ஒன்பதாவது விக்கெட்டுக்கு 22 ஓவர்களில் 35 ரன்கள் சேர்த்து இருந்தார். பும்ரா தனது விக்கெட்டை தக்க வைத்து ஆடிய நிலையில், மறுபுறம் ஜடேஜா ரன் சேர்த்தார். அதன் காரணமாக இந்திய அணி அப்போது வெற்றி இலக்கை நோக்கி மெதுவாக நகர்ந்தது. அதனால் பும்ராவை காயப்படுத்த இங்கிலாந்து அணி திட்டமிட்டதாக கைஃப் குற்றம் சுமத்தி இருக்கிறார். முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் தனது யூடியூப் சேனலில் பேசுகையில், பும்ரா மற்றும் ஜடேஜாவின் பார்ட்னர்ஷிப்பால் கோபமடைந்த இங்கிலாந்து அணி, பும்ராவுக்கு எதிராக பவுன்சர்களை வீசி வேண்டுமென்றே அவரை காயப்படுத்த சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டினார். இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர், பும்ராவை அவுட் செய்ய முடியாவிட்டால், மான்செஸ்டரில் நடைபெறவுள்ள நான்காவது டெஸ்ட்டுக்கு முன்னதாக அவரை காயப்படுத்தலாம் எனத் திட்டமிட்டதாக கைஃப் தெரிவித்தார். “பும்ராவுக்கு எதிராக பவுன்சர்களை வீச ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் திட்டமிட்டனர். அவர் அவுட் ஆகவில்லை என்றால், விரல் அல்லது தோள்பட்டையில் அடித்து காயப்படுத்த வேண்டும். எங்கள் பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ள கடினமாக இருக்கும் முக்கிய பந்துவீச்சாளரை காயப்படுத்துவது பந்துவீச்சாளர்களின் மனதில் இருக்கும். இது பின்னர் அவரை அவுட் ஆக்க பயன்பட்டது.” என்று கைஃப் கூறினார்.