பெங்களூர், ஜூலை 26- கர்நாடகாவில் எஸ்எஸ்எல்சி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் வகையில் பாஸ்’ மார்க் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு பாடத்தில் 30 மதிப்பெண்ணும், மொத்தமாக 33 சதவீத மதிப்பெண்ணும் எடுத்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் ஹேப்பியாகி உள்ளனர். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். துணை முதல்வராக டிகே சிவக்குமார் உள்ளார். கர்நாடகாவை பொறுத்தவரை தமிழகத்தை போல் எஸ்எஸ்எல்சி தேர்வில் ஒரு பாடத்தில் 35 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே தேர்ச்சி என்ற நிலை அமலில் இருந்தது. தற்போது அந்த தேர்ச்சி மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான பரிந்துரையை கர்நாடகா பள்ளி தேர்ச்சி மற்றுமு் மதிப்பீட்டு வாரியம் பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை ஏற்று அரசு சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, எஸ்எஸ்எல்சியில் ஒரு பாடத்தில் 35 மதிப்பெண்ணுக்கு பதில் 30 மதிப்பெண் எடுத்தால் போதும். அதேவேளையில், Internal – External-யை சேர்த்தால் 33 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு பாடபத்தில் சராசரியாக 33 மதிப்பெண் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மொத்த மதிப்பெண்ணை எடுத்து கொண்டால் 625க்கு 206 மதிப்பெண் எடுத்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கு குட்நியூஸாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு ஒரு பாடத்தில் 35 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்தது. ஆனால் மொத்த சராசரிக்கு என்ற கணக்கீடும் இல்லாமல் இருந்தது. தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்