Home Front Page News கோலிக்காக அவசரமாக நடத்திய விழா விசாரணையில் பரபரப்பு தகவல்

கோலிக்காக அவசரமாக நடத்திய விழா விசாரணையில் பரபரப்பு தகவல்

பெங்களூரு: ஜூலை 9-
பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானம் முன் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான வழக்கில், சி.ஐ.டி., விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. விராட் கோலி லண்டன் செல்ல வேண்டும் என்பதால், அவசர அவசரமாக பாராட்டு விழா நடத்த, கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷனுக்கு ஆர்.சி.பி., நிர்வாகம் அழுத்தம் கொடுத்தது தெரியவந்துள்ளது.
ஐ.பி.எல்., கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு எனப்படும், ஆர்.சி.பி., அணி வென்றதை கொண்டாடும் வகையில், ஜூன் 4ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
மைதானம் முன் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் பலியாகினர். இதுகுறித்து சி.ஐ.டி., – மாஜிஸ்திரேட் நீதி விசாரணை நடந்து வருகிறது.
சி.ஐ.டி., நடத்திய விசாரணையில், அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து சி.ஐ.டி., வட்டாரங்கள் கூறியதாவது:
கடந்த மாதம் 3ம் தேதி பெங்களூரு அணி வெற்றி பெற்றதும், கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் மற்றும் பெங்களூரு போலீசாரிடம், ஆர்.சி.பி., அணி தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் மேனன், விளம்பர பிரிவு தலைவர் நிகில் சோசலே ஆகியோர் பேசி உள்ளனர்.
‘ஆர்.சி.பி., அணி வெற்றி பெற்றதை மறுநாளே கொண்டாட வேண்டும்’ என கூறியுள்ளனர்.
‘பாதுகாப்பு காரணங்களுக்காக உடனடியாக நிகழ்ச்சி நடத்த வேண்டாம்’ என, போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், ‘விராட் கோலி, லண்டனுக்கு செல்ல உள்ளார்.
அதனால் உடனடியாக விழாவை நடத்தியே ஆக வேண்டும். தாமதம் ஏற்பட்டால், விழாவில் விராட் கோலி கலந்து கொள்ள மாட்டார்’ என, அசோசியேஷன் நிர்வாகிகளுக்கு, நிகில் சோசலே அழுத்தம் கொடுத்துஉள்ளார்.
‘மைதானத்திற்குள் ரசிகர்களுக்கு இலவச அனுமதி’ என்று சமூக வலைதளங்களில் ஆர்.சி.பி., நிர்வாகம் அறிவித்தது. இதனால் மைதானம் முன் ரசிகர்கள் கூடினர். கூட்டத்தை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தலைமைச் செயலகம் முன் நடந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்குவதில் போலீசார் அதிக கவனம் செலுத்தினர். இவ்வாறு சி.ஐ.டி., வட்டாரங்கள் தெரிவித்தன.

குற்றப்பத்திரிகைக்கு தடை: இதற்கிடையில், தங்கள் மீது பெங்களூரு கப்பன் பார்க் போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி, ஆர்.சி.பி., நிர்வாகமும், கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷனும், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி கிருஷ்ணகுமார் நேற்று விசாரித்தார். ஆகஸ்ட் 5ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார். அதுவரை விசாரணை அறிக்கை அல்லது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, தடை விதித்து உத்தரவிட்டார்.

Exit mobile version