Home சினிமா சிவராஜ்குமாருக்கு கன்னடத்தில் வீடியோ வெளியிட்டு கமல் வாழ்த்து

சிவராஜ்குமாருக்கு கன்னடத்தில் வீடியோ வெளியிட்டு கமல் வாழ்த்து

சென்னை:ஜூன் 11- கன்னட நடிகர் சிவராஜ் குமார் திரையுலகில் 40 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். அவருக்கு திரைத் துறையினர், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், சிவராஜ் குமாருக்கு நடிகர் கமல்ஹாசன் கன்னடத்தில் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது இந்த கருத்துக்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பொதுமக்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வந்தனர். மேலும், கமல்ஹாசன் கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.இதுகுறித்து கன்னட நடிகர் சிவராஜ் குமார் கூறுகையில், கமல்ஹாசன் கன்னட மொழி மீது மிகுந்த மரியாதை கொண்டவர். பெங்களூர் குறித்து கூறுவதற்கு அவரிடம் நல்ல விஷயங்கள் மட்டுமே உள்ளன. நான் கமல் சாருக்கு பெரிய ரசிகன். எனக்கு அவர் மீது மிகுந்த மரியாதை உள்ளது. அவர் என்ன கூறினார் என்பது கமல் சாருக்கு தெரியும். அவர் தகுந்த பதிலை கூறுவார் என்று தெரிவித்திருந்தார். மேலும், கமல்ஹாசனை விமர்சிப்பவர்கள் கன்னட மொழிக்காக என்ன செய்தார்கள் என்றும் கூறி நடிகர் சிவராஜ்குமார் கமல்ஹாசனுக்கு ஆதரவாக பேசியிருந்தார். இந்நிலையில், திரைத்துரையில் 40 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள கன்னட நடிகர் சிவராஜ் குமாருக்கு நடிகர் கமல்ஹாசன் கன்னடத்தில் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பேசிய கமல்ஹாசன், சிவான்னாவுக்கு நான் சித்தப்பா மாதிரி. ராஜ்குமார் அண்ணா எனக்கு காட்டிய அன்பு எதிர்பாராத அன்பு. சிவான்னாவைப் பொருத்தவரை இந்த 40 வருஷம் எப்படி ஓடியதென்று எனக்கு தெரியவில்லை. இன்று மாபெரும் நட்சத்திரமாக உயர்ந்து சாதித்துக் கொண்டிருக்கிற விஷயம்.. இனியும் சாதிக்கக்கூடிய விஷயம்.. எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

Exit mobile version