சென்னையில் விடிய விடிய மழை: தாழ்வான பகுதிகளில் வெள்ளம்

சென்னை: நவ.11
தமிழகத்தை நோக்கி காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்து வருவதையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து நேற்று இந்த மாவட்டங்கள் அனைத்திலும் உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் தொடர்ச்சியாக 12 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டிருந்தது. சென்னையிலும் பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்திருக்கிறது. இதனால் நேற்று முதலே பலத்த மழை பெய்யும் என்று எதிர் பார்க்கப்பட்டது. இதன்படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்குட்பட்ட பகுதிகளிலும் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
இன்று காலையிலும் 5 மணியளவில் இருந்தே சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சில இடங்களில் இடைவிடாமல் பெய்து கொண்டே இருந்தது. செங்குன்றம், புழல், மாதவரம், மூலக்கடை, பெரம்பூர், புரசைவாக்கம், டாணா தெரு, ஓட்டேரி, வேப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் காலை 7 மணியளவில் பலத்த மழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. பெரம்பூர் ஜமாலியா பகுதியில் எப்போதும் போல சாலையில் மழைநீர் தேங்கியது. பட்டாளம், வியாசர்பாடி, கன்னிகாபுரம், புளியந்தோப்பு, ஸ்பென்சர் சாலை, சூளை உள்பட வட சென்னையின் பல இடங்களில் வெள்ளம் போல் தண்ணீர் தேங்கியது.
பெரம்பூர் பஸ் நிலையம் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. வியாசர்பாடி ஜீவா சுரங்கபாதை பகுதியிலும் தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டது. அயனாவரம் பச்சைக்கல் வீராசாமி நகர், திருவள்ளுவர் நகர், நம்மாழ்வார் பேட்டை மார்க்கெட், ஐ.சி.எப். ரெயில்வே குடியிருப்பு வடக்கு காலனி, வில்லிவாக்கம் அன்னை சத்யா நகர், சீனிவாசன் நகர் வடக்கு ஜெகநாதர் நகர், ரெட்டி தெரு, வில்லிவாக்கம் மார்க்கெட், கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி பட்டரவாக்கம் பால் பண்ணை சாலை, மேனாம்பேடு கருக்கு, டி.டி.பி.காலனி, கள்ளிக்குப்பம் காந்திநகர், அத்திப்பட்டு அயப்பாக்கம் சாலை, அம்பத்தூர் அன்னை சத்யா நகர் போன்ற பகுதிகளில் மழைநீர் சாலைகளில் தேங்கியுள்ளது. இதனை மோட்டார் மூலம் அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.