
புதுடில்லி: ஜூலை 19-
பணமோசடி மற்றும் பிற நிதி குற்றங்களுக்காக விசாரணையில் உள்ள ஆன்லைன் பந்தய செயலிகளை விளம்பரப்படுத்தியதாக எழுந்த புகாரில், ஜூலை 21ம் தேதி ஆஜர் ஆக வலியுறுத்தி கூகுள், மெட்டாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
‘ஜங்லீ ரம்மி, ஜீட்வின், லோட்டஸ் 365’ உள்ளிட்ட, ‘ஆன்லைன்’ சூதாட்ட செயலிகள் வாயிலாக, சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடப்பதாக புகார் எழுந்தது. இந்த நிறுவனங்கள் திரைப்பட நட்சத்திரங்கள், இன்ஸ்டா, யு டியூப் பிரபலங்களை வைத்து விளம்பரப்படுத்தி, சட்ட விரோத பந்தயம் மற்றும் சூதாட்டம் வாயிலாக கோடிக்கணக்கான ரூபாய் ஈட்டியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.’ஆன்லைன்’ சூதாட்ட செயலிகள் விளம்பரத்தில் நடித்த புகார் தொடர்பாக, நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. பணமோசடி மற்றும் ஹவாலா பரிவர்த்தனைகள் உள்ளிட்ட கடுமையான நிதி குற்றங்களுக்காக தற்போது விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், பணமோசடி மற்றும் பிற நிதி குற்றங்களுக்காக விசாரணையில் உள்ள ஆன்லைன் பந்தய செயலிகளை விளம்பரப்படுத்தியதாக எழுந்த புகாரில், ஜூலை 21ம் தேதி ஆஜர் ஆக வலியுறுத்தி கூகுள், மெட்டாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
பந்தய விண்ணப்பங்களை விளம்பரப்படுத்த கூகிள் மற்றும் மெட்டா இரண்டும் தீவிரமாக உதவியதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது.
மொத்த மோசடி ரூ.6,000 கோடிக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக பல பாலிவுட் பிரபலங்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர். இதில் அரசியல் ரீதியாக லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டுகளும் உள்ளன. சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் ஆன்லைன் பந்தய செயலியின் விளம்பரதாரர்களிடமிருந்து ரூ.500 கோடிக்கு மேல் பெற்றதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.