பெங்களூரு: ஜூலை 18 – தங்க கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத, ஓராண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகையுமான ரன்யா ராவ் (32) துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக கடந்த மார்ச்சில் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.அவரது வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.2.8 கோடி மதிப்பிலான தங்கமும், ரூ.2.4 கோடி ரொக்கமும் சிக்கின. வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், அவர் மீது சட்டவிரோத தங்க கடத்தல் மற்றும் அந்நிய செலாவணி மோசடி ஆகிய சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு பெங்களூருவில் உள்ள பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இந்நிலையில் நீதிமன்றம், தங்க கடத்தல் வழக்கில் ரன்யா ராவ் மீதான குற்றச்சாட்டுகள் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் தரப்பில் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே அவருக்கு சட்டவிரோத தங்க கடத்தல் மற்றும் அந்நிய செலாவணி மோசடி ஆகிய சட்டப்பிரிவுகளின்கீழ் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டது.
இதுகுறித்து வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த பிரிவின்கீழ் தண்டிக்கப்பட்டுள்ளதால் ரன்யா ராவ் ஓராண்டுக்கு ஜாமீனில் வெளியே வர முடியாது” என தெரிவித்தார். ரன்யா ராவ் தரப்பில், இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தெரிவித்தனர்.