Home Front Page News தூக்குத் தண்டனை – பிரேமலதா வலியுறுத்தல்

தூக்குத் தண்டனை – பிரேமலதா வலியுறுத்தல்

சென்னை பிப். 8- பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு துாக்கு தண்டனை வழங்க தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வலியுறுத்தியுள்ளார்.
தேமுதிகவின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. துணை பொதுச்செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, அவைத் தலைவர் இளங்கோவன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.இக்கூட்டத்தில் வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை, மதுவிலக்கை அமல்படுத்துதல், அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் குற்றத்தில் பின்னணியில் உள்ளவர்களை கண்டறிதல் உட்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களிடம் பிரேமலதா கூறியதாவது: தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு துாக்கு தண்டனை வழங்க வேண்டும். மேலும் கஞ்சா, மது உட்பட போதைப்பொருட்கள்தான் இதற்கெல்லாம் காரணமாக உள்ளன. திருப்பரங்குன்றம் மலை குறித்து இத்தனை ஆண்டுகள் இல்லாத பிரச்சினை இப்போது ஏன் வருகிறது. திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மதத்தை, சாதியை துாண்டி அரசியல் செய்வதாக மக்கள் கருதுகின்றனர்.வாழ்ந்து மறைந்த எந்த தலைவர்கள் குறித்தும் அவதுாறாக பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் ஏப்ரல் மாதம் தருமபுரியில் நடைபெறுகிறது. அப்போது விஜயபிரபாகரன் உள்ளிட்டோருக்கு புதிய பதவிகள் வழங்கப்படும். 2026-ல் எங்கள் கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும்.
ஆளுநரும், ஆட்சியாளர்களும் நல்ல புரிந்துணர்வுடன் செயல்பட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் யார் அந்த சார் என்பது மக்களுக்கு தெரிய வேண்டும். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்-க்கு பாரத ரத்னா விருதும் பொது இடத்தில் மணிமண்டபமும் அமைக்க வேண்டும். கோயம்பேடு பாலத்துக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும். இவ்வாறு கூறினார்.

Exit mobile version