நீதிபதி யஷ்வந்த் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு

புதுடில்லி, ஜூலை 19- கட்​டுக்​கட்​டாக பணம் மீட்​கப்​பட்ட விவ​காரத்​தில் பதவி நீக்க நடவடிக்​கைக்கு எதி​ராக உச்ச நீதி​மன்​றத்​தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா மனு தாக்​கல் செய்​துள்​ளார். டெல்லி உயர் நீதி​மன்ற நீதிப​தி​யாக இருந்​தவர் யஷ்வந்த் வர்​மா. இவரது வீட்​டில் கடந்த மார்ச் 14-ம் தேதி நள்​ளிரவு தீ விபத்து ஏற்​பட்​டது. தீயணைக்​கும் பணி​யில் வீரர்​கள் ஈடு​பட்​ட​போது வீட்​டின் ஓர் அறை​யில் பாதி எரிந்த நிலை​யில் மூட்டை மூட்​டை​யாக ரூ.500 நோட்​டு​கள் கண்​டெடுக்​கப்​பட்​டன. இது நாடு முழு​வதும் பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது. இந்த விவ​காரம் குறித்து விசா​ரிக்க 3 நீதிப​தி​கள் கொண்ட குழுவை உச்ச நீதி​மன்​றம் அமைத்​தது. இக்​குழு சமர்ப்​பித்த அறிக்​கையை தொடர்ந்து வர்​மாவை பதவி வில​கு​மாறு அப்​போதைய தலைமை நீதிபதி சஞ்​சீவ் கன்னா கேட்​டுக்​கொண்​டார். ஆனால் வர்மா இதற்கு மறுத்​து​விட்​டார். இதையடுத்து விசா​ரணை அறிக்​கையை மத்​திய அரசுக்கு அனுப்​பிய சஞ்​சீவ் கன்​னா, வர்​மாவை பதவி நீக்​கும் நடை​முறை​களை தொடங்​கு​மாறு பரிந்​துரை செய்​தார். இதன் அடிப்​படை​யில் வரும் நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத்​தொடரில் வர்​மாவுக்கு எதி​ராக பதவிநீக்க தீர்​மானம் கொண்​டுவர மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ள​தாக தெரி​கிறது. இந்​நிலை​யில் பதவி நீக்க நடை​முறை​களுக்கு எதி​ராக உச்ச நீதி​மன்​றத்​தில் யஷ்வந்த் வர்மா மனு தாக்​கல் செய்​துள்​ளார். அவர் தனது மனு​வில், “11 ஆண்​டு​கள் அரசி​யலமைப்பு நீதி​மன்ற நீதிப​தி​யாக களங்​கமற்ற வாழ்க்​கை. விசா​ரணைக்​குழு பின்​பற்​றிய நடை​முறை தவறானது. என்னை தற்​காத்​துக் கொள்ள போது​மான வாய்ப்பு வழங்​கப்​பட​வில்​லை. விசா​ரணைக் குழு அமைக்​கப்​பட்​டது ஒரு உள் நடை​முறை. அதன் அறிக்​கையை அரசுக்கு அனுப்ப தலைமை நீதிப​திக்கு எந்த அதி​காரமோ அல்​லது காரணமோ இல்​லை. எனவே அவரது பரிந்​துரை சட்​ட​விரோத​மானது என அறிவிக்​க வேண்​டும்​” என்​று கூறியுள்​ளார்​.