Home Front Page News பள்ளி பஸ் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் பலி

பள்ளி பஸ் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் பலி

கடலூர்: ஜூலை 8-
கடலூரில் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதியது. மாணவர் 3 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
கடலூர் செம்மங்குப்பம் அருகே குழந்தைகளை ஏற்றிக் கொண்டு பள்ளி வேன் இன்று காலை சென்று கொண்டிருந்தது. செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் டிரைவர் ரயில்வே கேட்டை கடக்க முயற்சி செய்தார். அப்போது சிதம்பரம் நோக்கி சென்ற ரயில் பள்ளி வாகனம் மீது மோதியது.
இந்த விபத்தில் பள்ளி சாருமதி, நிமலேஷ் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் இருவர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த பள்ளி மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவர் செழியன், 15, உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்த செழியனும், சாருமதியும் சகோதரன், சகோதரி ஆவர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. ரயில் வருவதை டிரைவர் கவனிக்காமல் கடக்க முயன்ற போது விபத்து நிகழ்ந்துள்ளது என தெரிகிறது. ரயில் வரும்போது ரயில்வே கேட் மூடப்படாததால் இந்த விபத்து நேரிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் மோதியதில் வேன் சுக்கு நூறாக நொறுங்கியது. அதில் இருந்த பள்ளி குழந்தைகள், தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். குழந்தைகளின் பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்கள் தண்டவாளம் எங்கும் சிதறி கிடந்தன. சம்பவம் நடந்த இடத்தில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் திரண்டுள்ளனர். காயம் அடைந்த மாணவ மாணவியருக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Exit mobile version