
பெங்களூரு: ஜூன் 9-
பிட்காயின் மோசடி வழக்கில், கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான என்.ஏ.ஹாரிசின் மூத்த மகன் முகமது நளபாட்டுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் நளபாட்டுக்கு எதிராக சிறப்பு புலனாய்வு குழு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இதே வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது. அண்மையில்தான் நளபாட்டின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், தற்போது எஸ்.ஐ.டி. போலீசாரும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
தும்கூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் பிட்காயின்களை திருடிய வழக்கில், சர்வதேச அளவிலான ஹேக்கர் ஸ்ரீகிருஷ்ணா என்ற ‘ஸ்ரீகி’ என்பவரிடமிருந்து நளபாட்டுக்கு ‘பங்கு’ கிடைத்துள்ளதாக எஸ்.ஐ.டி. தனது குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது. நளபாட்டுடன் சேர்ந்து அவருடைய நெருங்கிய நண்பர்களின் பெயர்களும் இந்த ஊழலில் அடிபட்டுள்ளன.
கடந்த 2017-ஆம் ஆண்டு, தும்கூரில் உள்ள ஒரு பிட்காயின் வர்த்தக நிறுவனத்தின் இணையதளத்தை ஹேக் செய்து, ஸ்ரீகி கும்பல் 60 பிட்காயின்களை (இதன் 2024-ஆம் ஆண்டு சந்தை மதிப்பு ரூ.1.14 கோடி) திருடியது. இதுகுறித்து தும்கூர் புதிய நகர் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையை முடித்த எஸ்.ஐ.டி. அதிகாரிகள், சில நாட்களுக்கு முன்பு ஹேக்கர் ஸ்ரீகி, அவனது நண்பன் ராபின் கண்டேவாலா மற்றும் முகமது நளபாட் உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
நளபாட்டின் செல்வாக்கைப் பயன்படுத்தி, திருடப்பட்ட பிட்காயின்களை ஹேக்கர் ஸ்ரீகி பணமாக மாற்றியுள்ளான். இதற்குப் பிரதிபலனாக நளபாட்டுக்கு பெருமளவில் பணம் கிடைத்துள்ளது. மும்பையைச் சேர்ந்த தனது நண்பர் மூலமாக ஹவாலா முறையில் நளபாட்டுக்கு இந்தப் பணம் கைமாறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சொகுசு கார் வாங்கிய நண்பர்:
இந்த மோசடிப் பணத்தைக் கொண்டு, நளபாட்டின் நெருங்கிய நண்பரும், கர்நாடக மாநில ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவரின் மகனுமான நபர், ஆடம்பர சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். இது தொடர்பாக எஸ்.ஐ.டி. அதிகாரிகள் அவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
பள்ளிப் பருவத்து நட்பு:
முகமது நளபாட்டின் தம்பி உமர் நளபாட்டும், ஹேக்கர் ஸ்ரீகியும் பள்ளிப் பருவத்தில் ஒன்றாகப் படித்தவர்கள். தம்பியின் மூலமாகவே முகமது நளபாட்டுக்கு ஸ்ரீகியின் நட்பு கிடைத்துள்ளது. இந்த நட்பின் பின்னணியில்தான் பிட்காயின் தாதாவிற்கு நளபாத் துணையாக இருந்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


















