டெல்லி: செப். 17-
இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பை அமல்படுத்தியவர் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அதிபரின் ஆதரவாளர்கள் பலரும் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு நிதி அளிக்கிறது என வெளிப்படையாகவே சாடினார். இந்தியா மீது கடுமையான போக்கை காட்டி வந்த டிரம்ப் மற்றும் அவரது தலைமையிலான நிர்வாகம் திடீரென இந்தியாவை நட்புறவோடு அணுகத் தொடங்கி இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய 75ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார் . இதனை அடுத்து இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசி வாயிலாக அழைத்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார். தன்னுடைய ட்ரூத் சோசியல் பக்கத்தில் இது தொடர்பாக பதிவு செய்திருக்கும் டிரம்ப் “என்னுடைய நண்பர் நரேந்திர மோயிடம் தொலைபேசியில் பேசினேன். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினேன் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். நரேந்திர மோடி அளிக்கும் ஆதரவுக்கு நன்றி “ என தெரிவித்திருக்கிறார்.















