Home விளையாட்டு ரோஹித், கோலி சாதனையை உடைத்த ரிஷப் பண்ட்

ரோஹித், கோலி சாதனையை உடைத்த ரிஷப் பண்ட்

மான்செஸ்டர், ஜூலை 25- இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், கால் விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவையும் பொருட்படுத்தாமல் பேட்டிங் செய்த ரிஷப் பண்ட், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற புதிய சரித்திர சாதனையை படைத்துள்ளார். இதன்மூலம், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற ஜாம்பவான்களை அவர் பின்னுக்குத் தள்ளியுள்ளார். மான்செஸ்டரில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் வீசிய யார்க்கர் பந்து, ரிஷப் பண்ட்டின் கால் விரலை பலமாக தாக்கியது. வலியால் துடித்த அவர், 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி மைதானத்தை விட்டு வெளியேறினார். ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு கால் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது உறுதியானது. இதனால் அவர் இந்த போட்டியில் தொடர்ந்து பேட்டிங் செய்யமாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஷர்துல் தாக்கூர் ஆட்டமிழந்ததும், உடைந்த கால் விரலின் வலியையும் தாங்கிக்கொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி மீண்டும் களமிறங்கினார். அவர் பேட்டிங் செய்ய வந்தபோது மான்செஸ்டர் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி அவருக்கு மிகப்பெரிய மரியாதை செலுத்தினர். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட், 40 ரன்களை கடந்தபோது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்பு, ரோஹித் சர்மா 2716 ரன்களுடன் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். தற்போது ரிஷப் பண்ட் அவரை முந்தி 2731 ரன்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். விராட் கோலி 2617 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார்.

Exit mobile version