Home Front Page News வங்கதேச விமான விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு

வங்கதேச விமான விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு

டாக்கா, ஜூலை 22 – வங்கதேச விமானப் படையின் பயிற்சி விமானம் டாக்காவில் உள்ள பள்ளிக் கட்டிடத்தின் மீது மோதியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.வங்கதேச தலைநகரான டாக்காவின் உட்டாரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் நேற்று வங்கதேச போர் விமானம் மோதியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மதியம் 1:06 மணிக்கு எப்-7 பிஜிஐ பயிற்சி விமானம் புறப்பட்டு சிறிது நேரத்திலேயே பள்ளிக் கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இயந்திர கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.இந்த விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இப்போது 27 ஆக உயர்ந்துள்ளது, அவர்களில் 25 பேர் குழந்தைகள் என்று வங்கதேசத்தின் இடைக்கால தலைவர் முகமது யூனுஸின் சிறப்பு ஆலோசகர் சைதுர் ரஹ்மான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த விபத்தில் சுமார் 170 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக இன்று அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என வங்கதேச அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து வங்கதேச அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு உதவிபெறும் அமைப்புகள், தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களுக்காக நாட்டின் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் ஏற்பாடு செய்யப்படும். விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய வங்கதேச விமானப்படையால் உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

Exit mobile version