10 ஆண்டுகளில் இந்தியா சாதித்ததை கூறுங்கள் – மோடி

புதுடெல்லி, ஜன. 2: பல்வேறு துறைகளில் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன என்பது குறித்து பொதுமக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி கருத்து கேட்டுள்ளார்.விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் `நமோ’ செயலியில் இந்த கருத்துகளை பதிவிடுமாறு அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பான ஆய்வு நமோ செயலியில் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்தும், தாங்கள் சார்ந்த மக்களவைத் தொகுதி எம்.பி.யின் செயல்பாடுகள் குறித்தும் கருத்துகளை பதிவு செய்யுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நமோ (NaMo) செயலி மூலம் நடத்தப்படும் ‘ஜன் மன் சர்வே’யில் பங்கேற்று உங்கள் கருத்தை என்னுடன் நேரடியாகப் பகிரவும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். இதுதொடர்பான இணையதள லிங்க்கையும் ஷேர் செய்துள்ளார்.