10 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் நீதிபதி ரவீந்திர பட்டின் மாறுபட்ட தீர்ப்பு

புதுடெல்லி, நவ. 8- பொருளாதாரத்தில் நலிந்த பொது பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் நீதிபதி ரவீந்திர பட் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கினார். அவர் தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது-நாட்டின் மக்கள் தொகை அடிப்படையில் சினோ கமிஷன் கடந்த 2010-ம் ஆண்டு ஜூலையில் தாக்கல் செய்த அறிக்கையை இப்போது சுட்டிக் காட்ட விரும்புகிறேன். நாடு முழுவதும் 31.7 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளனர். இதில் தாழ்த்தப்பட்டோரின் (எஸ்சி) எண்ணிக்கை 7.74 சதவீதம் ஆகும். அதாவது அந்த சமுதாய மக்களில் 38 சதவீதம் பேர் வறுமையில் உள்ளனர். பழங்குடிகளில் (எஸ்டி) 4.25 கோடி பேர் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளனர். அதாவது அந்த சமுதாய மக்களில் 48 சதவீதம் பேர் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். பிற்படுத்தப்பட்டோரில் 13.86 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளனர். அதாவது அந்த சமுதாய மக்களில் 33.1 சதவீதம் பேர் வறுமையில் வாடுகின்றனர். பொது பிரிவினரில் 5.5 கோடி பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர். இதுஅந்த சமுதாய மக்களில் 18.2 சதவீதம் ஆகும். இந்த புள்ளி விவரங்கள் நாட்டின் உண்மை நிலையை கூறுகின்றன. பொருளாதார அடிப்படையில் பொதுபிரிவில் நலிந்த பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கியது சட்டவிரோதம் கிடையாது. ஆனால் பொருளாதார ரீதியான இடஒதுக்கீட்டில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரை சேர்க்காதது சட்டவிரோதம். சமூகத்தில் அனைத்து பிரிவினரும் முன்னேற வேண்டும். அதுதான் உண்மையான சமத்துவம் என்ற சுவாமி விவேகானந்தரின் கருத்தை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பொருளாதாரத்தில் நலிந்த பொது பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு பாரபட்சமாக இருக்கிறது. இதில் சமத்துவம் இல்லை. 50 சதவீத இடஒதுக்கீடு வரம்பை மீறியது பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும். எனவே பொருளாதாரத்தில் நலிந்த பொது பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் 103-வது அரசியலமைப்பு திருத்தம் செல்லாது. இவ்வாறு அவர் தீர்ப்பளித்தார்.