
ஆந்திர, ஜூன் 9 ஆந்திர மாநிலத்தில் தொழிலாளர்களை 10 மணி நேரம் வேலை வாங்கும் வகையில் தொழிலாளர் நல சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள செய்தி தொழிலாளர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு 8 மணி நேரமாக இருந்த வேலைநேரம் சில ஆண்டுகளுக்கு முன்பு 9 மணி நேரமாக மாற்றப்பட்டது. தற்போது 10 மணி நேரம் வேலை திட்டத்தை அனுமதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தொழில் துறையினர், முதலாளிகள் மத்தியில் இந்த முடிவுக்கு ஆதரவு பெருகியுள்ளது. இதன்மூலம் நாட்டின் உற்பத்தி பெருகி, பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். மாநிலத்துக்கு அதிக முதலீடுகள் கிடைத்து வளர்ச்சி உருவாகும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். அதேநேரம், தொழிலாளர்கள், தொழிலாளர் சங்கங்கள் மத்தியில் இதற்குகடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தொழில் துறையினரை மகிழ்விக்க எடுக்கப்படும் இதுபோன்ற முடிவுகள் தொழிலாளர்களை அடிமைகளாக மாற்றும் என்று அவர்கள் கூறுகின்றனர். இதன்மூலம் தொழிலாளர்களின் உடல்நலம் பாதிக்கும் என்று மருத்துவர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதுமட்டுமின்றி, பெண் தொழிலாளர்கள் இரவு 7 மணிமுதல் காலை 6 மணி வரை இரவுப்பணி பார்ப்பதற்கான அனுமதியையும் வழங்க ஆந்திர அரசு முடிவெடுத்துள்ளது. அதற்குரிய பாதுகாப்பு அம்சங்கள், போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி உள்ளிட்ட பெரும் தொழிலதிபர்கள் சமீபகாலமாகவே 10 மணி நேரம்,12 மணி நேரம் வேலை செய்யும் திட்டத்தை முன்மொழிந்து வருகின்றனர். அப்போதுதான் இந்தியா வளர்ச்சியை எட்டும் என்ற கருத்தை தெரிவித்த அவர்கள், அதற்கான எதிர்ப்புகளையும் சந்தித்துள்ளனர்.இந்த நிலையில், ஆந்திர அரசு இத்தகைய முடிவை எடுத்திருப்பது நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. இதேபோல, வேலை நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நெருக்கடி பெரும் முதலாளிகளிடம் இருந்து மற்ற மாநில அரசுகளுக்கும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.உழைப்பதற்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை இருக்கும் இடங்களில் வேறு வழியின்றி கூடுதல் நேரம் உழைக்க வைப்பதை ஒருவகையில் நியாயப்படுத்தலாம். ஆனால், லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றி தவிக்கும், மக்கள்தொகை அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாட்டில் தொழிலாளர்களை அளவுக்கு அதிகமாக வேலைவாங்க நினைப்பது சுரண்டல் மனப்பான்மையாகவே கருதப்படும்.