10 மாநில தேர்தல்: மக்களவை தேர்தலுக்கான அரை இறுதிப் போட்டி

புதுடெல்லி, ஜன. 3-
கடந்த 2014-ல் வீசத் தொடங்கிய மோடி அலை இன்னும் ஓயவில்லை என்பதே பொதுவானக் கருத்தாக உள்ளது. பலம் குறைந்த எதிர்க்கட்சிகளும் அவற்றுக்கு இடையே ஒற்றுமை இல்லாததும் மோடி அலை தொடருவதற்கான காரணமாக கூறப்படுகிறது.இச்சூழலில் புதிதாக பிறந்த 2023-ம் ஆண்டு, அரசியல் கட்சிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. காரணம் புதிய வருடத்தில் வரவிருக்கும் 10 மாநில சட்டப் பேரவை தேர்தல், 2024 மக்களவைத் தேர்தலுக்கான அரை இறுதிப் போட்டியாக கருதப்படுகிறது. இவற்றில் வெல்லும் கட்சி மீது மக்களின் ஆதரவு அலை வீசும் என்பது தேசிய அரசியலின் நம்பிக்கையாக உள்ளது.
கடந்த 2014-ல் மத்திய அரசுக்கு தலைமை ஏற்றது முதல் மாநில அளவிலும் பாஜக வளர்ந்தது. 29 மாநிலங்களில் 20-ல் நேரடியாகவும், கூட்டணி அமைத்தும் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. ஒன்றன் பின் ஒன்றாக அமைந்த இந்த ஆட்சிகளில் தற்போது சற்று சரிவு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் முடிந்த இமாச்சலபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜக ஆட்சியை காங்கிரஸ் அகற்றியது. அதற்கு முன் பிஹாரில் நிலவிய பாஜக கூட்டணி ஆட்சியும் கைநழுவியது. எனினும், சிவசேனா கட்சியின் பிளவால் மகாராஷ்டிராவில் பாஜக மீண்டும் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.ஹரியாணா, நாகாலாந்து, மேகாலயா மற்றும் புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைந் துள்ளது.
திரிபுராவில் பாஜக கூட்டணி ஆட்சி நிலைமையும் தற்போது சரியில்லாத நிலை தெரிகிறது. இதன் காரணமாக சுமார் 15 மாநிலங்களில் மட்டும் பாஜகவின் ஆட்சி பிரச்சினையின்றி தொடர்கிறது. சத்தீஸ்கர், ராஜஸ்தான், இமாச்சலபிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் மட்டும் காங்கிரஸ் ஆட்சி நிலவுகிறது. 10 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இவற்றில் தென்னிந்தியா வில் பாஜக ஆளும் ஒரே மாநிலமான கர்நாடகா, அக்கட்சிக்கு பெரும் சவாலாகி விட்டது.

இங்கு சர்ச்சைகளுக்கு இடையே அமைந்த பாஜக ஆட்சி மீது பெரும் ஊழல் புகார்கள் எழுந்துள்ளன. கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் முன்னாள் முதல்வர் எடியூரப்பா இடையிலான மோதலும் பாஜகவை சோதனைக்கு உள்ளாக்கி விட்டன. ரெட்டி சகோதரர்களுக்கு இடையில் பிளவு ஏற்பட்டு புதிதாக உதயமான கல்யாண் பிரகதி கட்சி பாஜகவுக்கு இழப்பை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.