100 இடத்தில் குண்டு வைக்க சதி: ஐஎஸ் தம்பதிக்கு 20 ஆண்டு சிறை

புதுடெல்லி: மே 11-டெல்லியில் ஒரே நாளில் 100 இடங்களில் குண்டு வைக்க சதி திட்டம் தீட்டிய ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை சேர்ந்த தம்பதிக்கு நீதிமன்றம் 20 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் 370-வது சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, ஸ்ரீநகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. அப்போது, அங்கிருந்து ஜஹான் ஜெப் ஷமி மற்றும் ஹினா பஷிர் பெய்க் ஜோடி டெல்லிக்கு இடம்பெயர்ந்தது. பின்னர் இருவரும் அக்டோபர் 6-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
பிடெக் மற்றும் எம்பிஏ பட்டப்படிப்பை முடித்த ஷமி, இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் இளங்கலை பட்டம், எம்பிஏ படிப்பை முடித்த ஹினா பஷிர் பெய்க், வங்கியில் பணியாற்றியவர். 30 வயதுக்கு உட்பட்ட இருவரும் ஜாமியா நகரின் சி பிளாக்கில் ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர்.
இந்த நிலையில், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் இவர்கள் இருவரையும் டெல்லி காவல் துறையினர் கடந்த 2020 மார்ச் 8-ம் தேதி கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில், இந்த தம்பதி ஐ.எஸ். அமைப்பின் உறுப்பினர்கள் என்று தெரியவந்தது. சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ளவர்களின் கட்டளைப்படி இவர்கள் செயல்பட்டு வந்ததும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், இருவருக்கும் 3 முதல் 20 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஒரே நாளில் 100 இடங்களில் குண்டு வைக்க இவர்கள் சதி திட்டம் தீட்டியது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது.
இவர்களது செயல்பாடுகளை உளவு அமைப்பு பல மாதங்களாகவே கண்காணித்து வந்துள்ளது. அப்போது, இவர்கள் பரிமாறிக்கொள்ளும் தகவல்களை இடைமறித்து கேட்டபோது, அவர்கள் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெற்று உள்நாட்டில் தீவிரவாதத்தை பரப்புவதற்கு துணைபோனது உறுதிப்படுத்தப்பட்டது என்று என்ஐஏ தெரிவித்துள்ளது.