100 பெண்களுக்கு ஆபாச தொல்லை கொடுத்தவர் கைது

மும்பை, மார்ச் 8- மும்பையில் 100 பெண்களுக்கு ஆபாச தொல்லை கொடுத்து வந்தவர் ஒரு ஆண்டுக்கு பிறகு போலீசாரிடம் சிக்கினார்.
ஆபாச தொல்லை மும்பை அந்தேரியில் பேஷன் டிசைனராக இருந்த பெண் ஒருவருக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் அடையாளம் தெரியாத நம்பரில் இருந்து ஆபாச வீடியோ, குறுந்தகவல் வந்தது. இதனால் அவர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் நம்பரை கொண்டு விசாரணை நடத்தியதில் பேஷன் டிசைன் கடையில் உதவியாளராக வேலை பார்த்த கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ராஜ்குமார் சுவாமி (வயது45) என்பவர் என தெரியவந்தது. இவர் அங்கு வேலை பார்த்து வரும் மற்ற பெண்களுக்கும் ஆபாச வீடியோ அனுப்பி தொல்லை கொடுத்து வந்ததால் உரிமையாளர் ராஜ்குமார் சுவாமியை வேலையில் இருந்து நீக்கம் செய்து உள்ளார். 100 பெண்கள் பாதிப்பு இதைத்தவிர மும்பையில் 100 பெண்களுக்கு அழைப்பு விடுத்து ஆபாச தொல்லை கொடுத்து உள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. அவரை பிடிக்க போலீசார் தேடிய போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தால் சிரமம் ஏற்பட்டு வந்தது. கடந்த வாரம் அவரது செல்போன் சிக்னல் புனேயில் இருப்பதாக காட்டியது. இதனை தொடர்ந்து போலீசார் புனேவிற்கு சென்றனர். அங்கு பதுங்கி இருந்த ராஜ்குமார் சுவாமியை பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை மும்பை அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு வருடமாக தலைமறைவாக இருந்த அவர் தற்போது போலீசில் பிடிபட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.