11 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

போபால்,மே. 14 –
மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள வெவ்வேறு 11 பள்ளி கூடங்களுக்கு ஒரே நேரத்தில் இ-மெயில் வந்துள்ளன. அதில், அந்த பள்ளிகளில் குண்டுவெடிக்கும் என மிரட்டல் விடப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி முதல்வர்கள் உடனடியாக போலீசாரிடம் இதுபற்றி புகார் அளித்தனர். இதேபோன்று, காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில்கள் சென்றுள்ளன.
இதனை தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட 11 பள்ளி கூடங்களுக்கும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர் குழுவினர் வரவழைக்கப்பட்டு அனைத்து இடங்களிலும் விரிவான சோதனை நடத்தப்பட்டது.
இதில், எந்தவொரு பள்ளி கூடத்தில் இருந்தும் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. இதனால், வெடிகுண்டு மிரட்டல்கள் வெறும் புரளி என தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து, இதுபோன்ற வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனர் மக்ராந்த் டியூஸ்கர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். இதனையடுத்து எங்கிருந்து இ-மெயில்கள் அனுப்பப்பட்டன என்பது பற்றி போலீசாரின் விசாரணை தீவிரமடைந்து உள்ளது.