12 மணி நேர வேலைக்கு எதிர்ப்பு

சென்னை::அக். 16-
மாநகர போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துநர்களுக்கு 12 பணி நேரம் பணி வழங்கும் வகையில் ஷிப்ட் போடப்பட்டுள்ளது. அதன்படி, பேருந்துகளை 12 மணி நேரம் ஒரே ஷிப்டாக இயக்க வேண்டும். இதில் 1 மணி நேரம் இடைவெளி வழங்கப்படுகிறது. 3 மணி நேர மிகைப் பணி ஊதியமாக ரூ.500 கொடுக்கப்படும்.
இந்தத் தொகையும் அனைத்து பயண நடைகளையும் பூர்த்தி செய்தால் மட்டுமே வழங்கப்படும். ஒரு நாள் வருகைப் பதிவு மட்டும் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதற்கு தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்க (சிஐடியு) பொதுச்செயலாளர் வி.தயானந்தம் கூறியதாவது:
10 ஆண்டுகளுக்கும் மேலாக ஓட்டுநர், நடத்துநர் பிரிவில் புதிய நியமனத்துக்கான எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் ஊழியர்களை மிகைநேர பணி வழங்கி வாட்டி வதைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணிக் காலத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நடப்பாண்டில் 92 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேநேரம், 12 மணி நேரம் பணி செய்வோருக்கு ஒரு வருகை பதிவு வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் ஒன்றரை நாள் வருகைப் பதிவாவது வழங்கப்பட வேண்டும். ஊதியம் வேண்டும் என்பவர்கள் நிச்சயமாக பணிபுரிவர். ஆனால் உடல் நிலை மோசமாகும். இதுவே விபத்துக்கு வழிவகுத்து பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். விருப்பப்படுவோருக்கு மட்டுமே மிகைப்பணி எனக் கூறும் அதிகாரிகள், இந்த ஷிப்டுக்கு வராவிட்டால் பேருந்து இல்லை என திருப்பி அனுப்பிவிடுகின்றனர். இதற்கு பயந்தும் ஊழியர்கள் வேலை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர். இது ஒரு அப்பட்டமான சட்ட விரோத, ஊதிய ஒப்பந்தத்துக்கு முரணான நடவடிக்கை.