12-வது மாடியில் இருந்து குதித்து பெண் டாக்டர் தற்கொலை

பாலக்காடு, மார்ச். 11 – கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் வசிப்பவர் சதா ரஹமத் (34). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று இவருக்கு பிறந்த நாள். அதனால் தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக நேற்று முன்தினம் இரவு இவர் அந்தப்பகுதியில் உள்ள ஒரு பிரபல ஓட்டலுக்கு சென்றார். இந்தநிலையில் நேற்று காலை 5 மணி அளவில் ஓட்டல் காவலாளி அங்கு ரோந்து சுற்றி வந்தார். அப்போது பெண் டாக்டர் சதா ரஹமத், அங்கு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். மேலும் அவர் ஓட்டலில் உள்ள 12- வதுமாடியில் இருந்து கீழே குதித்தது தெரியவந்தது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் கோழிக்கோடு போலீசார் அங்கு சென்று, பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் கூறும் போது, 12-வது மாடியில் அறை எடுத்து தங்கிய சதா ரஹமத், தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிரேத பரிசோதனைக்கு பிறகு காரணம் தெரியும் என்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.