1200 காளைகள், 800 வீரர்கள் தேர்வு

மதுரை: ஜன. 17: உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (ஜன.17) காலை உறுதி மொழியுடன் துவங்கிய நிலையில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து போட்டிகளை தொடங்கி வைத்தார்.
தைத்திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம் பாலமேடு ஜல்லிக்கட்டுகள் முறையே ஜனவரி 15, 16 ஆம் தேதிகளில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணி அளவில் உறுதிமொழி உடன் தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் சங்கீதா உறுதிமொழி வாசிக்க வீரர்கள் தொடர்ந்து உறுதி எடுத்துக் கொண்டனர். தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
1200 காளைகளும்,, 800 மாடுபிடி வீரர்களும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். போட்டியில் மாலை வரை 10 சுற்றுகள் ஆக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு சுற்றிலும் 50 வீரர்கள் களமிறங்குவர்.
அதில் அதிக காளைகளைப் பிடிக்கும் வீரர் அடுத்தடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவார். போட்டிகளில் வெற்றி பெறும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் தங்க நாணயம் சைக்கிள் பீரோ கட்டில் மெத்தை பித்தளை பாத்திரங்கள் அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன.
அபிசித்தர் முதலிடம்: தற்போது 4-ஆம் சுற்று நடைபெற்று வருகிறது. இதில் 50 வீரர்கள் நீல நிற ஆடையில் பங்கேற்றுள்ளனர். இதுவரை சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அபிசித்தர் 11 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளார். பாலமுருகன் 7 காளைகள் பிடித்து இரண்டாம் இடத்திலும் வீரசேரன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். முந்தைய சுற்றுகளில் சிறப்பாக விளையாடி 5 வீரர்கள் இந்த 4 சுற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண நடிகர் அருண் விஜய் போட்டியைக் காண வந்துள்ளார்.
அதிக காளைகளை பிடிக்கும் மாடு பிடி வீரர்களுக்கு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக ரூ.8 லட்சம் மதிப்புள்ள காரும், ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக்கும் பரிசாக வழங்கப்படுகிறது. களத்தில் சிறப்பாக விளையாடும் காளையின் உரிமையாளருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் சார்பாக ரூ.8 லட்சம் மதிப்புள்ள காரும் அதே போன்று பைக்கும் பரிசாக வழங்கப்படுகிறது.