128 ரயில் நிலையங்களில் புதிய வசதி

சென்னை: ஏப்ரல் 19- சென்னை கோட்டத்தில் 128 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை வரும் ஜூலைக்குள் முடிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயில் மொத்தம் உள்ள ஆறு கோட்டங்களில் சென்னை கோட்டம் தான் மிகப்பெரியது. இதில் மொத்தம் 160 ரயில் நிலையங்கள் உள்ளன. இவற்றில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், மயிலாப்பூர், வேளச்சேரி, கிண்டி, பெரம்பூர், செங்கல்பட்டு உள்பட பல்வேறு முக்கிய ரயில் நிலையங்களில் 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதுதவிர சென்னையின் முக்கிய ரயில் நிலையங்களில் ஆர்.பி.எஃப். போலீஸார், தமிழக ரயில்வே போலீஸார் தினமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
குறிப்பாக ரயில் நிலையங்களை தாண்டி, மகளிர் பெட்டிகளில் கண்காணிப்பு தீவிரமாக உள்ளது.
புறநகர் ரயில் வழித்தடங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அடிக்கடி சேட்டை செய்கிறார்கள்.. அபாயகரமான வகையில் பயணிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இவர்களை ஆர்.பி.எஃப். படையினர் கண்காணித்து எச்சரித்து வருகிறார்கள்.. சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை..
குறிப்பாக சென்னை சென்ட்ரல் – கூடூர், அரக்கோணம், சென்னை எழும்பூர் – விழுப்புரம் வழித்தடத்தில் பல்வேறு ரயில் நிலையங்களில் சிசிடிவி இல்லாமல் இருந்தது.. இந்நிலையில் மொத்தம் 128 நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. முன்னதாக சென்னை ரயில்வே கோட்டத்தில் சுமார் 74 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி சுமார் ரூ.25 கோடியில் நடந்தது. தற்போது அடுத்த கட்டமாக 128 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நிலையத்திலும் 10 சிசிடிவி கேமராக்கள் முதல் 25 சிசிடிவி கேமராக்கள் வரை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது