13 லஞ்ச அதிகாரிகள் சிக்கினர்

பெங்களூர் : டிசம்பர் . 5 – பெங்களூர் , மைசூர் , பீதர் , பெல்லாரி , விஜயநகர உட்பட மாநிலத்தின் 63 இடங்களுக்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் சோதனைகள் மேற்கொண்டுள்ள லோகாயுக்தா அதிகாரிகள் 13 ஊழல் அதிகாரிகளை தங்கள் வசம் எடுத்து கோடி கணக்கான சொத்து ரொக்கங்களை கைப்பற்றியுள்ளனர். மாநிலத்தின் 63க்கும் அதிகமான இடங்களில் தங்கள் வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்துள்ள 13 அதிகாரிகளின் அலுவலகங்கள் , மற்றும் வீடுகளில் தொடர்ந்து சோதனைகள் நடந்து வருகிறது. ஊழல் அதிகாரிகளின் கணக்கில் கோடிக்கணக்கில் அக்கிரம சொத்துக்கள் கண்டெடுக்கப்பட்டிருதுடன் அவற்றின் ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. பெங்களூரில் மட்டுமே மூன்று இடங்களில் லோகாயுக்தா அதிகாரிகள் சோதனைகள் மேற்கொண்டிருப்பதுடன் பெஸ்காம் விழிப்புணர்வு அதிகாரி டி என் சுதாகர் ரெட்டி என்பவரின் வீடு மற்றும் கூட்டுறவு சங்கத்தின் தலைமை செயல் நிர்வகிப்பாளராக உள்ள ஹெச் எஸ் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனைகள் நடந்து வருகிறது. இதே வேளையில் ஜெயநகரின் பெஸ்காம் செயல் பொறியாளர் சென்னகேசவாவுக்கு சொந்தமான ஜக்கூர் அருகில் உள்ள வீட்டிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தவிர சென்னகேசவாவுக்கு சொந்தமான அம்ருத் ஹள்ளியில் உள்ள வீட்டிலும் சோதனைகள் நடந்து வரும் nilaiyil இவருடைய வீட்டிலிருந்து 6 லட்சம் ரொக்கம் , 3 கிலோ தங்கம் , 28 கிலோ வெள்ளி , 25 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் , மற்றும் 5 லட்ச ரூபாய்கள் மதிப்புள்ள 7 பழங்கால பொருள்கள் கிடைத்துள்ளன.

இவற்றின் மொத்த மதிப்பு 1.5 கோடி ரூபாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜெயநகர் பெஸ்காமில் செயல் பொறியாளராக பணியாற்றிவரும் சென்னகேசவா அபார்ட்மெண்ட் மற்றும் வர்த்தக வளாகங்களுக்கு மின் தொடர்பு அளிக்க லட்ச கணக்கில் லஞ்சம் பெற்று வந்ததாக புகார்கள் உள்ளது. இது குறித்து பலரும் லோகாயுக்தா பொலிஸாருக்கு புகார் அளித்திருந்த நிலையில் தற்போது லோகாயுக்தா போலீசார் சோதனைகள் மேற்கொண்டுள்ளனர். இதே போல் சென்னகேசவாவுக்கு சொந்தமான ஏழு இடங்களில் லோகாயுக்தா போலீசார் சோதனைகள் மேற்கொண்டுள்ளனர். தவிர இவர் மிகவும் ஆடம்பர அபார்ட்மெண்டில் வசித்து வந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதே போல் கும்பலகோடு – கணிமினிக்கே அருகில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அதிகாரி வீட்டிலும் லோகாயுக்தா அதிகாரிகள் சோதனைகள் மேற்கொண்டுள்ளனர். இதே போல் நஞ்சன்கூடு அரசு முதல் வர்க்க கல்லூரி பேராசிரியர் மஹாதேவஸ்வாமி என்பவரின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 12 இடங்களில் சோதனைகள் நடந்துள்ளது. குடும்பத்தின் பெயரில் எம் எஸ் க்ரூப் என்ற நிறுவனம் , மற்றும் வருமானத்துக்கு மீறிய சொத்துக்கள் சேர்த்துள்ளது குறித்து வந்த புகார்களின் பேரில் லோகாயுதாவினர் இந்த சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். இதே போல் பெல்லாரி மற்றும் விஜயநகர் மாவட்டங்களிலும் லோகாயுக்தா அதிகாரிகள் சோதனைகள் மேற்கொண்டுள்ளனர். பெல்லாரி மாவட்டத்தின் குவாரி மற்றும் நில விஞ்ஞான துறை அதிகாரி சந்திரசேகர் , வன துறை டி ஆர் எப் ஓ மாருதி என்பவர் வீட்டிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் சந்திரசேகர் பெல்லாரியில் வேலை செய்து வரும் நிலையில் வீடு ஹோஸ்பேட்டெயில் உள்ளது. வனத்துறை அதிகாரி மாருதி கங்காவதியில் பணியாற்றிவரும் நிலையில் இவருடைய வீடு காம்ப்ளியில் உள்ளது. இந்த நிலையில் சந்திரசேகரின் ஹோஸ்பேட்டே வீடு மற்றும் மாருதியின் கம்பளி மற்றும் கங்காவதி வீடுகளில் அதிகாரிகள் சோதனைகள் மேற்கொண்டுள்ளனர். இதே போல் பீதாரிலும் இன்று அதிகாலை முதலே சோதனைகளில் ஈடு பட்ட லோகாயுக்தா அதிகாரிகள் இங்குள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக ஊழியர் சங்க சுனில் குமார் என்பவர் வீட்டில் சோதனைகள் மேற்கொண்டுள்ளனர். தவிர யாதகிரி டி ஹெச் ஓ ஆக உள்ள டாக்டர் பிரபு லிங்க மாநகர் என்பவர் வீட்டிலும் லோகாயுக்தா போலீசார் சோதனைகள் மேற்கொண்டுள்ளனர். இவருக்கு சொந்தமான குலபுரகி கருணேஸ்வரா காலனியில் உள்ள வீடு மற்றும் யாதகிரியில் உள்ள வாடகை வீடு ஆகிய இடங்களில் சோதனைகள் நடந்து வருகிறது. தவிர பி ஜே பி மாநில தலைவர் பி வொய் விஜயேந்திரா மனைவியின் சகோதரன் வீட்டிலும் லோகாயுக்தா சோதனைகள் நடந்து வருகிறது.