133 மி.மீ மழை பொழிவு

விழுப்புரம்: ஜன. 9: தொடர் மழையால் மரக்காணம் செல்லியம்மன் கோயில் தெரு,அம்பேத்கர் நகர், மண்டவாய், புதுகுப்பம், கந்தாடு, புதுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.கந்தாடு ஏரியின் நீர்ப்பாசனத்தை நம்பி இப்பகுதியில் சுமார் 200 ஏக்கர் விலை நிலங்கள் உள்ளன. கடந்த வாரம் பெய்த பருவ மழையால் இந்த ஏரி முழு கொள்ளளவை எட்டியது. இந்நிலையில் மரக்காணம் பகுதியில் பெய்த கனமழையினால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக ஏரியின் மையப் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு,கட்டுக் கடங்காமல் நீர் வெளியேறியது.
இதனால் பழைய தெரு,புதுத் தெரு, கந்தம்பாளையம் ஈஸ்வரன் கோயில் தெரு, காணிமேடு உள்ளிட்ட பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் அப்பகுதியில் சுமார் 200 ஏக்கர் விவசாய நிலங்களை வெள்ளம் சூழந்தது.
மரக்காணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ராய நல்லூர், அசப்போர், வண்டிப் பாளையம், புதுப்பாக்கம், திருக்கனூர் பிலாரி மேடு, பச்சை பயித்தன் கொல்லை, அனுமந்தை, ஆலப்பாக்கம், கீழ் பேட்டை, கூனிமேடு, நடுக்குப்பம் உள்ளிட்ட ஊராட்சிகளிலும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. குடியிருப்பு பகுதிகள் சாலைகளில் தேங்கி நிற்கும் மழை நீரை உடனடியாக வெளியேற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.